பெண் பூப்பு அடைவதைக் கொண்டாடலாமா?

Image

முதல் அடிமைச் சங்கிலி

சின்னஞ்சிறு பெண் பூப்படைவதை ஃப்ளக்ஸ் அடித்து, ஊர் முழுவதும் கூட்டி வைத்து விருந்து வைப்பது இன்னமும் தமிழர் பண்பாடு என்று கொண்டாடி வருகிறார்கள். ஒரு வகையில் இந்த விழா இந்தியா முழுக்க கொண்டாடுகிறார்க. தாய்மாமன் சீர்வரிசையாக மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, சீப்பு, கண்ணாடி, பச்சை ஓலை குச்சில் கட்டுவது, பட்டுச்சேலை, பூ, மாலை, பாத்திரம், மேளதாளம், வானவேடிக்கைகள் போன்றவற்றை வழங்குவார்கள்.

இந்த விழாவை அந்த சின்னப் பொண்ணும் பெருமையாக மதிக்கிறாள். பெற்றோர்கள் பெருமைப்படுகிறார்கள். ஊர்ப் பெரியவர்களும் மதிக்கிறார்கள். இதுவெல்லாம் சரியான நடவடிக்கை தானா..?

இது குறித்து எழுத்தாளர் .இரெ.அரசெழிலன், ‘’பூப்பு என்ற வார்த்தைக்கு பூப்படைதல் என்பதே சரியான பொருள். ஒரு செடியில் இருக்கும் சிறு மொட்டானது தன் இதழ்களை விரித்து நறுமணத்தை பரவச் செய்து பூவாக உருவெடுத்தலே அப்பூவிற்கான வளர்ச்சி. இதற்குப் பிறகே இதனுடைய முக்கியமான வேலை ஆரம்பமாகிறது; அதாவது பூ காயாகி காய் கனியாகிறது.

இதே மாதிரியான உடலியல் மாற்றத்தை கொண்டவள் தான் பெண். சிறு குழந்தையாக இருந்தவள் வளரிளம் பருவத்தை அடையும் போது அவளுடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வது இயல்பான ஒன்றே.  இனப்பெருக்க செயல்கள் முதிர்ச்சியடைந்து அடைந்து கனியை (உயிரை) உருவாக்க தயார் என்பதே பெண்கள் பூப்படைவது.

வெளியிலிருந்து பார்க்கும் போது “”பூப்புனித நீராட்டு விழா”_ என்று சொல்லப்படும் இவ் விழாவானது கொண்டாட்டத்தையும் பெருமிதத்தையும் கொண்டதாகத்தான்  தோன்றுகிறது. ஆனால் “”ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்”” என்பதைப் போல இதன் உள்ளார்ந்த கருத்துக்கள் அனைத்துமே பெண்களை அடிமைப்படுத்தும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை அவளுக்காக கொண்டாடப்படும் அனைத்து விழாக்களின் பின்னணியிலும் ஆண் ஆளுமை உண்டு என்பதே நிதர்சனம்.

திருமணத்திற்கு நிகராக மிகவும் ஆடம்பரமாக ஏன் இவ்விழாவை கொண்டாடுகிறீர்கள் என்று இதை தனது கெளவரவமாக நினைக்கும் பழமைவாதிகளிடம் கேட்டால்,  இதுவே நமது மரபு , கலாச்சாரம், பண்பாடு என்ற அறிவிலி தனமாக பதில் சொல்வார்கள். பழந்தமிழ் இலக்கியம் என்று போற்றப்படும் தொல்காப்பியத்தில் கூட பூப்பு என்பதற்கான வெளிப்படையான பொருள் கொண்ட வார்த்தை எங்குமே பயன்படுத்தப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

ஒரு பெண்  குறிப்பிட்ட வயது எட்டியவுடன் அவளது கருமுட்டை உதிர்வதினால் ஏற்படும் உதிரப்போக்கை கொண்டாடிக் கழிப்பதை போல ஏன் உங்களால் ஆணுக்கு ஏற்படும் விந்து வெளியேற்றத்தையும் அவனது அரும்பு மீசையையும் கொண்டாட முடியவில்லை. குறைந்தது அதை உங்களது நெருங்கிய சொந்தங்களிடமாவது தெரிய படுத்தலாமே???

இறைச்சி,கோழி இங்கே கிடைக்கும் என கறிக் கடையில் அறிவிப்பு பலகை இருப்பது போல ஆணின் சொத்துக்கு பிள்ளை பெற்று தர எங்கள் வீட்டில் பெண் அணியமாக இருக்கிறாள் என அறிவிப்பதற்காகவே பூப்பு நீராட்டு விழா கொண்டாடப்படுகின்றது.

ஒரு குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் தன் வீட்டின் வாசலில், பொது இடங்களில்,தெருவில் எங்கும் விளையாடலாம்; ஆனால் பெரிய பெண்ணானவுடன் அவளுடைய விளையாடுகின்ற தளம் சுருக்கப்படுகிறது. ஒரு குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அவன் ஆணாக மாறும் போது அவனுக்கு ஏற்கனவே இருந்த தளம் விரிவடைகிறது. ஆக ஒரு பெண்ணுக்கான உரிமைகள் பூப்படைதல் முதல் அவளிடமிருந்து அவள் அனுமதி இல்லாமலேயே பிடுங்கப்படுகிறது.

ஒரு பெண் பூப்படைதல் என்பது அவளது உடல் சார்ந்த தனிப்பட்ட மாற்றம் அதை பிரகடனப்படுத்தி கொண்டாடும் உரிமை பெற்றோருக்கு கிடையாது‌ என்பதை இச்சமூகத்தில் உள்ள குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் உணர்ந்து கொண்டோமேயானால் இது மாதிரியான பூப்புனிதம் என்ற பெயரில் பெண்களுக்கு பூட்டு போடும் பழக்கத்தை நிறுத்த முடியும்’’ என்கிறார்.

பெண் பிள்ளை பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் இது பாடம்.

Leave a Comment