• Home
  • யாக்கை
  • சாம்பல், வேப்பங்குச்சி வைத்து பல் துலக்கலாமா..?

சாம்பல், வேப்பங்குச்சி வைத்து பல் துலக்கலாமா..?

Image

பல் டாக்டர் இந்து

நம் அன்றாட வாழ்வில், காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. இந்தப் பழக்கம் வாயின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்கவல்லது. பல் துலக்குதல் குறித்து பொதுவான மருத்துவ முறைகளை வழங்குகிறார், பிரபல பல் மருத்துவர் இந்து.

பல் துலக்குதல் என்பது நம் வாயிலும் பற்களிலும் உள்ள அழுக்கை நீக்கத்தான். இந்த அழுக்கானது, பல் ஈறுகளிலிருந்து நீக்கப்படாத உணவுத் துகளும், கிருமிக் கூட்டங்களும் கலந்த ஓர் கலவையே. இவை, பல்லை மட்டுமல்லாமல் பல் ஈறுகளுக்கும் பாதிப்புகளை அதிகமாக்குவதோடு, பற்களை இழப்பதற்கும் காரணமாகிவிடுகிறது.  ஆகையால், ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது மிகவும் அவசியம். அப்போதுதான் பற்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பற்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். முதலில் காலையில் எழுந்துவுடன் பல் துலக்க வேண்டும். பின்பு, இரவு தூங்கப்போவதற்கு முன்பு பல் துலக்க வேண்டும்.

டூத்பிரஷ்ஷை, நாம் எத்தனை தடவை பயன்படுத்துகிறோம் என்பதைவிட, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். ஆகையால், வெறும் கடமைக்கு அதுவும் 10-15 நிமிடம் வாயில் ப்ரெஷ்ஷை வைத்திருப்பதால் எந்த ஒரு பயனுமில்லை. ஒரு பட்டாணி அளவுக்கு டூத் பேஸ்ட்டை எடுத்து, இரண்டு நிமிடம் துலக்கினாலே போதும். அவர்கள் துலக்குவதைப் பொறுத்து பற்கள் சுத்தமாயிடும்.


பொதுவாக, பற்களின் இடுக்குகள் அல்லது பற்களின் மீது படிந்திருக்கும் துகள்களை அப்புறப்படுத்தவே நாம் பல் துலக்குகிறோம். அதற்கு முதலில், கடைவாய்ப் பற்களில் இருந்து பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் மொத்தப் பற்களையும் துலக்கிய திருப்தி கிடைக்கும். கீழ்வரிசை மற்றும் மேல் வரிசைப் பற்களை ஒட்டியபடி துலக்கும்போது நுண்கிருமிகள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே மறைந்திருக்கும். எனவே, மேல்வரிசைக்கும் கீழ்வரிசைக்கும் இடைவெளிவிட்டு துலக்கும்போது கழிவுகள் வாய்க்குள் சென்றுவிடும், அவை பின்னர் வாய்கொப்பளிக்கும்போது வெறியேறிவிடும்.

அதேபோல இரவு தூங்கும் முன்னர் பல்துலக்குவதும் அவசியம். தூங்கும்போது நமது உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகள் முற்றிலும் நிறுத்தப்படுவதால் பல் இடுக்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இரவு பல்துலக்குதல் நல்லது.


பொதுவாக, சிலர் இரண்டு பிரெஷ் பயன்படுத்துவார்கள். ஒன்று, பற்களைக் கிளீன் செய்வதற்கு. மற்றொன்று, நாக்கைச் சுத்தம் செய்வதற்கு. நாக்கில் இருந்து வரக்கூடிய, சில துகள்கள் பற்களைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், இந்த சாஃப்ட் பிரெஷ்ஷை வைத்தே சுத்தப்படுத்திக்கொள்வது நல்லது. மிருதுவான, கூர்முனை இல்லாத, வட்ட வழுவழுப்பான முனைகள் கொண்ட நைலான் குச்சுகளுடன்கூடிய பிரெஷ்களால், பல் துலக்குவது நல்லது. கூர்முனை குச்சுகளை தவிர்க்க வேண்டும். கடினமான மற்றும் விரைப்பான குச்சுகள்கொண்ட பல் துலக்கிகள் பல்லின் எனாமல் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தி விடக்கூடும். அவைகளை தவிர்த்தல் நலமே.


பல்வரிசையை சீராக்குவதற்கு பொருத்தப்படும் கிளிப் பொருத்தி உள்ளவர்கள், அதற்கென உள்ள ஸ்பெஷல் பிரஷ்சைப் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையே பின்புறத்தில்தான் அதிக அளவு கிருமிகள் இருக்கும். இவைகளை நீக்க இண்டர்டென்டல் பிரஸ் எனப்படும் பல்லிடுக்கு பிரெஷ்களைப் பயன்படுத்தலாம். அதுபோல், டூத் பேஸ்ட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆகையால், சென்சிட்டிவிட்டி பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்துவது நல்லது. அது இல்லாதவர்கள், பொதுவான பேஸ்ட்டை உபயோகிக்கலாம்.


அதுபோல், குழந்தைகளுக்கு என தனியாக டூத் பேஸ்ட்கள் வருகின்றன. அதை வாங்கிக் கொடுத்து அவர்களை பயன்படுத்தச் சொல்லலாம். சிறுவர்களுக்கும், ஒரு பட்டாணியின் அளவிலான பற்பசையினை உபயோகித்தலே போதுமானது. ஏனெனில் சில சிறுவர்கள், அதிக பற்பசை வைத்தால் துலக்கும்போது விழுங்கிவிட வாய்ப்புண்டு. இது, அவர்களுக்கு உடலில் அதிக அளவிலான புளூரைடு நிறைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பளிக்கும்.


நிறைய பேர் டூத்பேஸ்ட்டைத் தவிர, செங்கல், சாம்பல், வேப்பங்குச்சி…. இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா? அதைப் பயன்படுத்திய முன்னோர்க்கு எல்லாம் பற்கள் நன்றாகத்தானே இருக்கிறது என்கின்றனர்.  உண்மைதான். ஆனால், நம் முன்னோர்கள் பீட்சா, பர்கர் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய உணவு, உடலுக்கேற்ற நல்ல  ஆரோக்கியமான உணவாக இருந்தது. உடலைப் பாதிக்கக்கூடிய உணவுப்பொருட்களை அவர்கள் எடுக்கவில்லை. அதனால், அவர்களுக்கு இவையெல்லாம் எஃபெக்டிவ்வாக இருந்தது. ஆனால், நம்முடைய ஜங்க் ஃபுட் வாழ்க்கை மாற்றத்தால், உடலில் பாதிப்புகள் வரலாம். ஆதலால், இந்த காலத்தில் செங்கல், சாம்பல் எல்லாம் பயன் தராது.

Leave a Comment