நீட் தேர்வு ரத்து ரகசியம்
நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும், தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க என்று ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் வீரமாக முழங்கினார் உதயநிதி ஸ்டாலின். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில், ‘மத்திய அரசு நினைத்தால் மட்டுமே முடியும்’ என்று சட்டமன்றத்தில் இதற்கு காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாக ராகுல் உறுதியளித்தார் என்றும் சொல்கிறார். நீட் தேர்வு குறித்து உதயநிதி வாக்கு கொடுத்தது சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் என்பதால், இதனை நிறைவேற்றும் முழு பொறுப்பும் ஸ்டாலினுக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் ஒன்றாகவும் இப்போது ஒன்றும் பேசுவது இரட்டை நாக்கு அரசியலை அம்பலப்படுத்துகிறது. அதோடு, மக்களை நம்பவைத்து ஏமாற்றி கழுத்தறுத்த செயலாகவே இது பார்க்கப்படுகிறது.
அதனாலே ஸ்டாலின் நீட் தேர்வு விளக்கத்தை விஜய் கூட கிண்டல் செய்கிறார். இது குறித்து பா.ஜ.க.வினர், ‘’நீட் தேர்வு மூலமாக தமிழகத்தின் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கும் நிலையில், மாணவர்களை உற்சாகப்படுத்தி தேர்வுக்கு தயார் செய்வோம் என வாக்குறுதி அளிப்பதற்கு பதிலாக நீட் தேர்வையே ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு மூன்று வருடங்களுக்கு பிறகு தங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த தேர்தல் நெருங்கும் போது முந்தைய வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்து கேட்டுவிடுவார்கள் என்பதால், நீட் தேர்வை ரத்து செய்யாமல் இருப்பது மத்திய அரசின் குற்றம் என்ற விதமாக ஆளும் அரசு பிரச்சாரத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறது. மதுக்கடைகளை மூடுவது, கல்விக்கடன், நகைக்கடன் ரத்து, மாதாமாதம் மின்கட்டண வசூல், தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே போன நிலையில், அடுத்த மூன்று மாத இடைவெளியில் நீட் தேர்வு அறிவிப்பு வெளியாகும் முன் முதல்வர் சட்டசபையில் நீட் தேர்வு ரத்து குறித்து பேசி இருக்கிறார்.
அரசியலுக்காக நீட் தேர்வு குறித்து பல கட்சிகளும் செய்யும் இதுபோன்ற நாடகங்களை நம்பி ஏமாறாமல், விழிப்புணர்வோடு, மாணவர்கள் தங்களை தேர்வுகளுக்கு நன்றாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கொந்தளிக்கிறார்கள்.
நிஜமான கொந்தளிப்பு.