கணவரிடம் பழைய காதலை சொல்லலாமா..?

Image

ஞானகுரு ஆலோசனை

ஞானகுருவுக்கு ஒரு பை நிறைய பழங்களை அள்ளிக் கொடுத்தாள் இளம் பெண் ஒருத்தி. ஏதேனும் விஷேசமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவள் முகத்தைப் பார்த்தார். அதற்கான வாய்ப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

 ‘’என்ன தவறு செய்திருக்கிறாய் பெண்ணே..?” தூண்டில் போட்டார் ஞானகுரு.

மளுக்கென கண்ணீர் சிந்த, ‘’என் கணவரிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன்… அது அவருக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயம் இப்போது வந்துவிட்டது” என்றாள். மேலும் பேசும்படி ஞானகுரு கண் ஜாடை காட்டியதும் பேசத் தொடங்கினாள்

‘’நான் ஒருவரை கல்லூரி காலத்தில் உயிருக்கு உயிராக காதலித்தேன். ஆனால், கல்லூரி முடிந்ததும், அந்த காதல் முடிந்து போய்விட்டது. அதன்பிறகு அவர்  வேறு ஊருக்கு போய்விட்டதால், அந்த காதலால் எந்த பிரச்னையும் இல்லை. வீட்டில் கல்யாணம் குறித்து பேசியதும், ஒப்புக்கொண்டேன். என் கணவர் நல்லவராகத்தான் இருக்கிறார். அவர் முதல் இரவிலேயே, ‘உனக்கு ஏதேனும் பழைய காதல் இருக்கிறது என்றால், இருந்தது என்றால் சொல்லிவிடு…’ என்று கேட்டார். அப்போது, அப்படி எதுவும் இல்லை என்று தைரியமாகச் சொல்லிவிட்டேன்.

எங்களுடைய திருமண வாழ்வு நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. சமீபத்தில்தான், என்னுடன் கல்லூரியில் படித்த ஒருவர், என் கணவருடைய அலுவலகத்தில் வேலை செய்கிறார் என்பது தெரியவந்தது. அவருக்கு நான் கல்லூரி காலத்தில் செய்த காதல் நன்றாகவே தெரியும். என் கணவரிடம் அதை சொல்லிவிடுவாரோ.. எங்கள் உறவு பிரிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” என்று சொல்லி முடித்தாள்.

‘’இப்போதும் உனக்கு பழைய காதல் மிச்சம் இருக்கிறதா.?”

‘’உண்மையாகவே இல்லை…’’

‘’கணவன் மனைவி உறவு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டிய ஒன்று. பழைய காதல் என்பது குற்றம் அல்ல. ஆனால், திருமணத்திற்கு முன்பு யார் காதல் செய்திருந்தாலும், யார் தப்பு செய்திருந்தாலும் அதனை சொல்லியிருக்க வேண்டும். நீ செய்த காதல் உன் கணவனுக்குத் தெரிய வேண்டியது அவசியம். திருமணத்திற்கு முன்னரே சொல்லி இருக்கலாம். திருமணம் முடித்த தினத்திலாவது, ஒரு பப்பி லவ் இருந்தது என்று சொல்லி, முடித்திருக்கலாம். இப்போது தானாக அது வெளிவந்துவிடுமோ என்று அச்சப்படுகிறாய்…”

‘’கல்லூரி தோழரை சந்தித்து, என் காதலை சொல்லிவிட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கலாமா.?’’

‘’அது, இன்னமும் மோசமான சிக்கலை உருவாக்கிவிடும் பெண்ணே. இப்போது உன் மனதில் காதல் இல்லை என்றால், எத்தனை விரைவில் உன் கணவனிடம் உண்மையை சொல்ல முடியுமோ, அத்தனை சீக்கிரம் சொல்லிவிடு…”’

‘’அவர் கோபப்படுவாரே, என்னைவிட்டு பிரிந்துபோனால்..?’’

‘’அப்படி நடக்காது என்ற நம்பிக்கையுடன் இரு. ஆனால், உண்மையை மறைக்க முடியாது பெண்ணே. உன் கல்லூரி நண்பர் இல்லாவிட்டாலும், வேறு யாராவது ஒருவர் சொல்லிவிடலாம். நீ சொல்லாமல், வேறு யார் மூலமாவது உன் காதலை கேட்க நேர்ந்தால், அது உன் கணவருக்கு பெருத்த வருத்தத்தையும் கோபத்தையும் தரும்…’’

‘’இப்போது நான் என் கணவருக்கு உண்மையாகத்தான் இருக்கிறேன். ஆகவே, என் பழைய காதல் என்பது அத்தனை பெரிய தப்பு இல்லைதானே..?’’

‘’இது எத்தனை பெரிய தப்பா அல்லது தப்பு இல்லையா என்பதை உன் கணவன் முடிவு செய்யட்டும். இத்தனை நாட்கள் மறைத்ததற்கான காரணத்தையும் சொல்லிவிடு. ஆனாலும், உண்மையை மனதிற்குள் பூட்டி வாழ முடியவில்லை என்பதையும் சொல்.

பொதுவாக ஆண்கள் பழைய குப்பைகளைக் கிளறுவதில்லை. திருமணத்திற்குப் பிறகு நீ நல்ல மனைவியாக இருந்தால், உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஒருவேளை சண்டை போடலாம். கொஞ்ச நாள் பிரியலாம், தள்ளி வைக்கலாம். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிடு.. அதுதான் உனக்கு நிம்மதியைக் கொடுக்கும்…’’

‘’ஒருவேளை அவர் என்னை வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் என்ன செய்வது..?’’

‘’கொஞ்சநாள் உன் பிறந்த வீட்டில் இரு. அவருடைய அழைப்புக்காக காத்திருப்பேன் என்பதை சொல்.  பிரிவு அவருக்கு சில உண்மைகளை உணர்த்தும். எனவே, நன்மை நடக்கும் என்று நம்பிக்கையுடன் இரு. பொய்யுடன் பயந்துபோய் வாழ்வதைவிட, உண்மையைச் சொல்லி வரும் சிக்கலை சந்திப்பது மேல். சரி, அவருக்கு இப்படி ஒரு காதல் இருந்தது அல்லது இருப்பது தெரியவந்தால் நீ என்ன செய்வாய்..?’’

ஒரு கணம் திகைத்து நின்றாள். ‘’நிச்சயம் சண்டை போடுவேன். பழைய காதல் இன்னமும் தொடர்கிறதா என்று பார்ப்பேன். அப்படி இல்லை என்றால் கொஞ்ச நாளில் சமாதானம் ஆகிவிடுவேன்…’’

‘’அப்படியே உனக்கும் நடக்கட்டும் பெண்ணே…”” என்றபடி சாய்ந்து படுத்தார் ஞானகுரு.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்