• Home
  • யாக்கை
  • காய்ச்சலுக்கு இளநீர் குடிக்கலாமா?

காய்ச்சலுக்கு இளநீர் குடிக்கலாமா?

Image

ஃபீவர் ஹெல்த் டிப்ஸ்

காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டால் ஏழு  நாளில் குணமாகும். மருந்து சாப்பிடாவிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்பது நகைச்சுவையா அல்லது உண்மையா என்று பார்க்கலாம்.

பொதுவாக மனித உடலின் வெப்பநிலை 98.6 டிகிரியாக இருக்க வேண்டும். பருவ காலத்துக்கு ஏற்ப இதில் சின்னஞ்சிறு மாறுதல் இருப்பது தவறில்லை. வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டுவதை காய்ச்சல் என்கிறோம். காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல நமது நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது, நோய்க் கிருமிகளை எதிர்த்துப்  போராடுவதை உடல் காட்டும் அறிகுறியே காய்ச்சல்.

பாக்டீரியா,  வைரஸ்கள் போன்ற கிருமிகள்  சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடித்து வாழக்கூடியவை. எனவே, உடலின் வெப்ப நிலை சிறிது அதிகரிப்பதால் இந்த நோய்க் கிருமிகள் பெருகுவது  பெரிதளவு கட்டுப் படுத்தப்படுகிறது.  காய்ச்சல் காரணமாக நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகி வெள்ளையணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, காய்ச்சல் என்பது உடலுக்கு நன்மை தரும் ஒரு செயல்.

ஆனால், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் பெற்றோர் பதறிவிடுகிறார்கள். உடனடியாக உடல் சூட்டை தணிப்பதற்கு மருந்து, மாத்திரை கொடுப்பார்கள். துணியை தண்ணீரில் நனைத்து துடைத்து எடுப்பார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் நேரத்தில் உடல் சூடு அதிகரிக்கும் என்றாலும் 105 டிகிரிக்கு மேல் போகாது. குறிப்பாக வைரஸ் தொற்று காரணமாக வரும் காய்ச்சல் 105க்கு மேல் அதிகமாவதில்லை.  காய்ச்சல் அதிகமானால் ஜன்னி வந்துவிடும், இழுப்பு வந்துவிடும் என்றெல்லாம் அஞ்சுவார்கள். மிகவும் அபூர்வமாகவே அப்படி நிகழும் என்பதால் காய்ச்சலுக்கு பயப்படுவதற்கு அவசியமே இல்லை.  

காய்ச்சல் சாதாரணமாக உருவாகி, உடலில் வேறு ஒரு பிரச்சினையும் இல்லாத பட்சத்தில், காய்ச்சலுக்குத் தனியாக மருந்து எதுவும் தேவையில்லை என்பதே உண்மை. காய்ச்சலுக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை என்பது, உடல் வலி போன்ற அவஸ்தைகளைக் குறைப்பதற்கும், வைரஸ்களை எதிர்த்து போராட உடலுக்கு  உதவி செய்வதும் தான். இந்த காலகட்டத்தில் நிறைய நீராகாரம் எடுத்துக்கொண்டு உடலுக்கு ஓய்வு கொடுத்தாலே காய்ச்சல் தானாகவே குணமாகிவிடும்.

உடல்  மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் அவஸ்தைப்படும் நேரத்தில் மட்டும் காய்ச்சலை குறைக்க முயற்சிக்கலாம். காய்ச்சலால் குளிரில் நடுங்குபவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது . வெப்பத்தின் தாக்கம் இல்லாத வகையில் அறையை  காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது. தேவைப்பட்டால் மட்டும் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்

பெரும்பாலான காய்ச்சல் வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுபவை என்றாலும், அதனை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும். அதாவது, தொடர்ந்து எத்தனை நாட்கள் காய்ச்சல் இருக்கிறது? காய்ச்சல் மாலை மட்டும் வருகிறதா? காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா?  விட்டு விட்டு வரும் காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு நேரம்? தினமும் காலை எழும் நேரத்தில் மட்டும் காய்ச்சல் வந்து போகிறதா?  என்பது போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும். தேவைப்படும் பட்சத்தில் ரத்த பரிசோதனை, சிறு நீர் பரிசோதனை, மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை போன்றவை ஆரம்ப கட்டத்தில் போதுமாக இருக்கும்.  ஒரு வாரத்துக்கும் மேல் காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தீவிர பரிசோதனையும் மருத்துவர்களின் கண்காணிப்பும் அவசியம்.

சாப்பிடலாமா வேண்டாமா..?

காய்ச்சல் வந்தவர்கள் வயிறை பட்டினி போட்டால் உடல் சரியாகிவிடும் என்று சிலர் சொல்வதுண்டு. இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. ஆகவே, ஒருபோதும் இதனை முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், இது ஆபத்தான கருத்து. காய்ச்சல் நேரத்தில் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது. எனவே சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.

எனவே கஞ்சி, பார்லி, சத்துமாவு போன்ற திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது காய்ச்சலால் ஏற்படும் நீரிழிப்புக்கு நல்லது. மிருதுவான,  காரம், மசாலா இல்லாத  உணவு வகைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட இட்லி, இடியாப்பம் போன்ற வேக வைத்த உணவுகள் நல்லது. அதோடு காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம். பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும், எனவே தண்ணீர் வழக்கத்தை விட அதிகம் குடிக்க வேண்டும்.

காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. இளநீர், மோர் போன்றவை ஒருபோதும் பக்கவிளைவு உண்டாக்காது. அதேநேரம், இளநீர் பற்றிய பயம், அச்சம் கொண்டிருப்பவர்கள் இப்போது அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் மனக்குழப்பம், மன அழுத்தம் காரணமாகவும் காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ஒரு வாரம் வரை காய்ச்சலுக்கு மருந்துகள் எடுக்காமல் போதிய ஓய்வும், நல்ல உணவும் சாப்பிட்டாலே சாதாரண காய்ச்சல் நன்கு குணமாகிவிடும். அப்படி காய்ச்சல் குறைந்தவுடன் உடனடியாக வழக்கமான வாழ் முறைக்கு மாறிவிடக் கூடாது. அடுத்த சில வாரங்கள் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் தேவையான புரதச் சத்து உடலுக்குத் தேவைபடும். எனவே பால், தயிர், பருப்பு, கீரைகள், காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுவோர் உணவில் காரம் மசாலா அதிகம் கூடாது. வேகவைத்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரஸ்களை அழிக்கிறது.  அதேபோல் காய்ச்சல் நேரத்தில் இருக்கும் தொண்டை கரகரப்புக்கு ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.

எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடல் தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும். எனவே பொதுவாக ஆரோக்கிய உணவுகள் எடுத்துக்கொள்பவர்களால் மருந்து இல்லாமலே காய்ச்சலை விரட்டிவிட முடியும்.

இதற்கு உறவினர்களும் உதவ வேண்டும். காய்ச்சலின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும். ஆதரவாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை இதமாக்க வேண்டும். நம்பிக்கை தரும் பேச்சு, நல்ல உணவு, போதிய கவனிப்பு, அன்பு காட்டுதல் போன்றவை முக்கியம். அதோடு முழு ஓய்வும் நல்ல தூக்கமும் அவசியம். இவற்றின் மூலம் எந்த மருந்துகளும் இல்லாமலே காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம் என்பதே உண்மை.  

காய்ச்சல் நேரத்தில் பலரும் குளிப்பதற்கு விரும்புவதில்லை. குளித்தால் உடல் மோசமாகிவிடும் என்று அஞ்சுவார்கள். குளிக்க விரும்புபவகள் இளஞ்சூடான நீரில் குளிப்பது தவறு இல்லை. பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது. இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடலாம், உடலின் வெப்பநிலை அதிகரித்தும் விடலாம். ஆகவே, குளிப்பதற்குப் பதிலாக நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுப்பது போதும்.

காய்ச்சலைக் கண்டு அச்சப்படாதீங்க. அது நம்மை எச்சரிக்கும் நண்பன்.

Leave a Comment