வழிகாட்டுகிறார் வழக்கறிஞர் நிலா
வீடு அல்லது மனை வாங்கும் அனைவரும் பத்திரம், பட்டா மற்றும் வில்லங்க சான்றிதழ் ஆகிய அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து முடிவெடுக்கிறோம். ஆனால், அவை தவிரவும் சொத்துக்கள் வாங்கும் சமயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் வழக்கறிஞர் நிலா.
இதுகுறித்து நிலா, ‘பொதுவாக நிலம் வாங்குபவர்கள் மனை முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா எனப் பார்ப்பதுடன், அது சம்பந்தப்பட்ட பல விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, சட்டப்படியும் ஆவணங்கள் அடிப்படையிலும் மனை சரியானதாக இருந்தாலும், அது அமைந்துள்ள விதம் எப்படியென்பதை ஆய்வு செய்ய வேண்டும். பல்வேறு விஷயங்களில் விபரமாக இருப்பவர்கள்கூட இதில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். மேலும் லே அவுட் அல்லது தனி மனையை விற்பவர்கள், அதனருகில் அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலங்கள் எதுவுமிருந்தால், அதைச் சாதகமான விஷயமாகக் கூறிக்கொள்கின்றனர்.
அரசுத் துறைகளுக்குச் சொந்தமான நிலம் என்றால், அது எந்த துறையின் பயன்பாட்டுக்கானது என்பதைப் பார்க்க வேண்டும். கல்வி, உள்ளாட்சி, சுகாதாரம், நெடுஞ்சாலை, தொழில் போன்ற துறைகளுக்குச் சொந்தமான நிலம் என்றால், சிலர் கூடுதல் விலைக்கும் விற்கின்றனர். உண்மையில், இதுபோன்ற அரசுத் துறைகளின் நிலங்கள் எதிர்காலத்தில் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது. குறிப்பாக, இந்த நிலங்கள் பல ஆண்டுகள் முந்தைய மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.
அதனருகில் உள்ள தனியார் நிலங்கள் மனைகளாக விற்கப்பட்டு இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அப்பகுதியில் அதிகரிக்கும் மக்கள்தொகை காரணமாக, ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்படலாம். அப்போது அதை ஒட்டிய நிலங்கள் கையகப்படுத்தப்படலாம். சில சமயங்களில் கையகப்படுத்தாமல் விரிவாக்க திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அங்கு ஏற்படும் சுகாதார குறைபாடு, நெரிசல் போன்றவை பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
ஆகையால், மனை வாங்கும்போது ஓடைகள், வாய்க்கால் போன்ற மழை நீர் பாதைகளும், துறை சார்ந்த இடங்களும் இருந்தனவா, இருக்கின்றனா எனப் பார்த்து, நன்கு விசாரித்து வாங்குவது அவசியம். மழை நீர் பாதைகள் என்றால், பிற்காலத்தில் பிரச்சினைகள் வரக்கூடும். லேஅவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது, அதுவும் அரசுத் துறைக்கானதா, வருங்கால விரிவாக்க திட்டத்திற்கானதா எனப் பார்த்து வாங்குவது அவசியம்’ என்கிறார்.
எம்.நிலா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், தொடர்புக்கு; 7299753999