ஞானகுரு பதில்கள்
கேள்வி : ஆலய வழிபாடு முறை எப்படி உருவானது..?
- பி.சாந்தி, அல்லம்பட்டி.
ஞானகுரு :
மனிதனிடம் சுயநலம் வந்ததும் ஆலய வழிபாடும் உருவானது. கடவுள் என்று நம்பியவர் தனக்கும் தன்னை சேர்ந்தவருக்கு மட்டும் அருள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தே ஆலயத்தை உருவாக்கி, கடவுளை கட்டிப் போட்டார்கள். இந்த சுயநலம் அதிகமானதும் தெருவுக்குத் தெரு ஆலயங்கள் முளைத்தன. இந்த ஆலயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே, பிரதோஷம், நட்சத்திர பூஜை, கும்பாபிஷேகம் என்று விதவிதமாக சொல்லி கல்லா கட்டுகிறார்கள். உடலே ஆலயம் என்று சொன்ன சித்தர்களை மனிதர்கள் மறந்தே போனார்கள்.
கேள்வி : உறவுகளில் தாய் மாமனுக்குத்தானே அதிக பொறுப்பு..?
- என்.மாடசாமி, மாடக்குளம்.
ஞானகுரு :
அண்ணனும் தம்பியும் இருக்கும் வீட்டில் இருவருக்கும் அடிதடி, சண்டை நடக்கும். அதுவே, அண்ணன், தங்கை என்றால் விட்டுக்கொடுத்து போவார்கள். அந்த பாசத்துக்கு ஆத்மார்த்தமான பிணைப்பு இருக்கவே செய்கிறது. இன்னும் ஒரு தலைமுறைக்குப் பின் தாய் மாமன்மார்கள் இருக்கவே மாட்டார்கள். ஏனென்றால், எல்லா வீட்டிலும் ஒரே குழந்தைதானே கும்மாளம் போடுகிறது.
