இதுவும் ஆன்மிக சீட்டிங்
மூச்சுப் பயிற்சியை தவம் போன்று செய்துவரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஞானகுருவை சந்தித்தார். ‘நான் சின்ன வயதில் இருந்து மூச்சுப் பயிற்சியை நாள் தவறாமல் செய்துவருகிறேன். ஆனால், அவ்வப்போது உடல் நலம் கெட்டு மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய அவசியம் நேர்கிறது. நான் தவறான வழியில் மூச்சுப் பயிற்சி செய்கிறேனா என்று சந்தேகம் கேட்டார்.
மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்து, அதனை வெளியிட்டபிறகு பேசத் தொடங்கினார் ஞானகுரு.
’’வியாதி, நரை, மூப்பு, மரணம் இல்லாத அஸ்வினி சகோதர்கள்தான் பிரான, அபானன் என்ற வாயுக்களாக மூச்சுக் காற்றில் இயங்குவதாக வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இடகலை, பிங்கலை, சூயகலை, சந்திரகலை, சுசூம்னை என்றெல்லாம் சொல்லி விதவிதமாக மூச்சுப் பயிற்சி கற்றுத் தருகிறார்கள். மூச்சு எத்தனை தூரம் அடக்குகிறோமோ, அத்தனை தூரம் ஆயுள் கூடும் என்றும் சொல்வதுண்டு. ஆனால், அதற்கு எந்த நிரூபணமும் இல்லை.
அதேநேரம், நிதானமாக மூச்சுவிடும் ஆமை பல்லாண்டு வாழ்கிறது. எதற்கெடுத்தாலும் இரை தேடி ஓடிக்கொண்டிருக்கும் விலங்குகளும் பறவைகளும் சீக்கிரம் செத்துப்போகின்றன. எனவே, நிதானமான மூச்சு போதும். அதற்கு சிறப்பு பயிற்சி தேவையில்லை. நீங்கள் பரபரப்பும் படபடப்பும் இல்லாமல் வாழ்வதே நல்ல மூச்சுப்பயிற்சி
தினமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் மூச்சுப் பயிற்சி பழகுவதால் மட்டும் நோயில் இருந்து உடலைக் காப்பாற்ற முடியாது. நடை பயிற்சி, உடற்பயிற்சி போன்று மூச்சுப் பயிற்சியும் உடல் நலனுக்கான ஒரு சாதாரண பயிற்சி மட்டுமே.
நோயை வெல்வதற்கு பரபரப்பு இல்லாத மனம் வேண்டும். உடலுக்கு நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். நோய்க்கு ஏற்ற உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். நோய்க் கிருமிகளை நீக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பயமும் பதட்டமும் இன்றி அமைதியான வாழ்க்கை முக்கியம்.
மூச்சுப் பயிற்சி என்றால் என்னவென்றே அறியாத ஒருவன் நீடுழி வாழ்வதும், தினமும் மூச்சுப்பயிற்சி செய்பவன் திடீரென மரணமும் அடையலாம். இதுதான் இயற்கையின் விசித்திரம். மூச்சுப் பயிற்சி கற்றுத் தருகிறேன் என்று மாதக்கணக்கில் பணம் வாங்கும் போலிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். ஆன்மிகம் என்ற பெயரில் நிறையவெ சீட்டிங் நடக்கிறது.
மூச்சுப் பயிற்சி செய்வதற்கு விருப்பம் இருந்தால் செய்யுங்கள். ஆனால், இதன் மூலம் பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். இதுவே, கற்கவேண்டிய பாடம்.