என்ன செய்தார் சைதை துரைசாமி – 278
பேருந்து சாலைகள் மற்றும் உட்பற சாலைகளில் கேபிள் டி.வி., இன்டர்நெட் மற்றும் காப்பர் வயர்கள் மாநகராட்சிக்குச் சொந்தமான தெருவிளக்கு கம்பங்களில் கட்டப்பட்டதற்கு மாநகராட்சியின் சார்பில் கட்டணம் வசூல் செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதும், நீண்ட காலமாக கட்டணம் உயர்த்தப்படாததும் மேயர் சைதை துரைசாமிக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார். அப்போதும் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் மெத்தனமே காட்டினார்கள். அதாவது கேபிள் வயர்களை கணக்கு எடுப்பதும், அதற்கு ஏற்ப வசூல் செய்வதும் நடக்கும் காரியம் இல்லை என்றே கூறினார்கள். மாநகரட்சிக்கு வருமானம் வரும் இந்த கேபிள் கட்டண விவகாரத்தை மேயர் தீவிரமாக மேற்கொண்டார்.
இதையடுத்து முதல் பணியாக தெரு விளக்குக் கம்பங்கள் மற்றும் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள ஒயர்களின் நீளம் வார்டு வாரியாக கணக்கீடு செய்யப்பட்டது. அதுவரை மாநகராட்சி சார்பில் கணக்குப் பார்க்கும் வழக்கமே இருந்தது கிடையாது. அப்போது யாருடைய கேபிள் என்பதும் யாருக்கும் தெரியாத அவலங்கள் இருந்தன.
அதாவது கணக்கு காட்டாமல் மறைப்பதற்காக கேபிள் வயர்களில் எந்த பெயரும் பொறிக்கப்படாமல் வயர்கள் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த மேயர் சைதை துரைசாமி அதிரடியாக ஓர் உத்தரவு பிறப்பித்தார். அதாவது, அனைத்டு கேபிள் ஒயர்களிலிலும் அடையாளம் இருக்க வேண்டும். அடையாளம் இல்லாத வயர்கள் துண்டிக்கப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
சென்னை மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி வயர்களைத் துண்டிப்பதற்கு ஆணை பிறப்பித்த பிறகே, அனைத்து நிறுவனங்களும் அவசரம் அவசரமாக வயர்களை அடையாளம் காணும் வகையில் அடையாள அட்டைகள் பொருத்துவதற்கு முன்வந்தன. இது, மேயர் சைதை துரைசாமியின் அதிரடி நடவடிக்கையாலே சாத்தியமானது.
- நாளை பார்க்கலாம்.