ஏப்ரல் 8 – புரட்சி தினம்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1929ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி புரட்சி தினம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தியா முழுக்க புரட்சித் தீ பரவிய தினம்.
பகத்சிங், அவரது நண்பன் பி.கே. தத் – இருவரும் டெல்லி மத்திய சபையில் தலையைக் குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தனர்.
இந்தியத் தொழிலாளர்களை ஒடுக்கும் சட்டவரைவு நிறைவேறியதாக, ஜெனரல் சுஸ்டர் என்ற வெள்ளை அதிகாரி எழுந்து அறிவித்தார். உடனே பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், உறுப்பினர்கள் யாரும் அற்ற இருக்கைகளை நோக்கி வெடிகுண்டுகளை வீசினார்கள். அடுத்து, ’செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம்” என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினார்கள்.
அவர்கள் நினைத்திருந்தால் அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி எளிதில் தப்பியிருக்க முடியும். அப்படி செய்யாமல் வெடிகுண்டு வீசிய இடத்தில் நின்றபடியே, ‘இன்குலாப் ஜிந்தா பாத்!, பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் ஒழிக!, உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்! என்று முழக்கமிட்டனர்.
உடனே பகத்சிங்கும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பரபரப்புத் தீயை பற்றவைத்தது. ஏற்கெனவே ஆங்கிலேயே காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்ற வழக்கு தன் மீது இருந்தபோதும், தாய் நாட்டுக்கு உயிரைக் கொடுக்கத் தயாராக பகத்சிங் தன்னை வெளிப்படுத்திய தினம் இன்று.
இந்திய விடுதலைப்போராட்டதின் முக்கிய நாளாக இன்றைய தினத்தை நாம் நினைவில் கொள்வோம்.
