என்ன செய்தார் சைதை துரைசாமி – 192
நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சேத்துப்பட்டு ஏரியின் கொள்ளளவை அதிகரித்து, கரையைப் பலப்படுத்தும் நடவடிக்கையை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபாலும், பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமியும் இணைந்தே மேற்கொண்டனர். இது, சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பெருமளவு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொடுத்தது.
இதன் காரணமாக ஏரியைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. மேலும், இந்தப் பகுதியை சுற்றியிருக்கும் பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கையும் மேம்பட்டது. சாக்கடை கலக்காத நீர் நிலையாக மாற்றம் பெற்றதால், கொசு தொல்லை குறைந்து மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
சேத்துப்பட்டுப் பூங்காவை பசுமைப் பூங்காவாக வடிவமைப்பதற்கு திட்டங்கள் தீட்டினார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி, ஒரே நேரத்தில் எத்தனை பேர் இந்தப் பூங்காவிற்கு வந்தாலும், அதனை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு கூடுதல் வசதிகள் செய்துதருவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக பல அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
பூங்கா எல்லா காலங்களிலும் பசுமை நிறைந்து திகழவேண்டும் என்பதற்காக ஏரியின் கரைகளில் அரிய வகை மரங்களும், அழகு தரும் மரங்களும் நடப்பட்டன. மேலும் மூலிகை செடிகளும், புல்வெளிகளும் அமைக்கப்பட்டன. அதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு மூலிகை காற்று மூலம் ஆறுதலும் தேறுதலும் கிடைத்தன.
சிறுவர்கள், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் சிறுவர் பூங்காவும் உள்ளேயே அமைக்கப்பட்டது. இதுதவிர நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு வசதியாக நடைபாதைகள் புதுமையாக படைக்கப்பட்டன. மாதக் கட்டணம் செலுத்தி, இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது.
இதற்கு எல்லா மகுடமாக ஏரியில் சொகுசு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாகச விரும்பிகள் செல்லும் வகையில் தனிப்படகுகளும், குடும்பத்தினர் செல்வதற்கு ஏற்ற பெரிய படகுகளும் விடப்பட்டன. சென்னை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வது மக்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது. சென்னை நகருக்குள் படகுப் பயணம் செய்யும் அனுபவத்தை மக்களுக்குக் கொடுத்தவர் மேயர் சைதை துரைசாமி என்றால், அது மிகையில்லை.
- நாளை பார்க்கலாம்