என்ன செய்தார் சைதை துரைசாமி – 318
மேயர் சைதை துரைசாமி காலத்தில் தான் முதன்முறையாக குப்பைத் தொட்டியைக் கழுவும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதோடு, 15 நாட்களுக்கு ஒரு முறை குப்பைத் தொட்டியைக் கழுவ வேண்டும் என்றும் உத்தரவு போட்டார். இதனால், குப்பைத் தொட்டிகள் எல்லாமே புதியவை போன்று காட்சியளிக்கத் தொடங்கின. குப்பைத் தொட்டி என்றாலே அருவருப்பு என்ற நிலையை மாற்றிக் காட்டியவர் மேயர் சைதை துரைசாமி.
அரசியல் பிரமுகர் அல்லது முக்கிய அதிகாரிகள் ஒரு தெருவுக்கு வரும் நேரங்களில் மட்டும் குப்பைத் தொட்டியை நன்கு தூய்மைப்படுத்தி, அதன் அருகே பிளீச்சிங் பொடி போடும் நடைமுறை இருந்தது. சுண்ணாம்புப் பொடி, பிளீச்சிங் பொடி போடுவது மக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பு கொடுக்கும் என்பதை அறிந்தார் மேயர் சைதை துரைசாமி. இதையடுத்து, தொடர்ந்து இதனை உபயோகிப்பதற்கு அறிவுறுத்தினார்.
அதாவது, குப்பை அகற்றியதும் குப்பைத் தொட்டி அமைந்திருக்கும் இடம் மற்றும் குப்பைத் தொட்டி அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் சுண்ணாம்பு, பிளீச்சிங் பொடி பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து குப்பைத் தொட்டி கழுவப்படுவது குறித்தும் குப்பை அகற்றப்பட்ட இடங்களில் சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் போடப்படுவதும் முறையாக நடக்கிறதா என்பது ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று குப்பை அகற்றும்போது சாலைகளில் சிதறிவிழும் குப்பைகள், உடனடியாக அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் பொதுமக்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்று விரும்பினார் மேயர் சைதை துரைசாமி. எனவே, பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்கு வசதியாக குப்பை எடுக்கும் நேரம், ஆய்வாளர் தொடர்பு எண் போன்றவை குப்பைத் தொட்டியில் அல்லது அதன் அருகில் ஏதேனும் ஓர் இடத்தில் தெளிவாகப் புரியும் வகையில் குறிப்பிடப்பட்டது. மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட இந்த மாற்றம் பொதுமக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றது.
- நாளை பார்க்கலாம்.