• Home
  • அழகு
  • முகத்துக்கு பளீச் தரும் பிளீச்

முகத்துக்கு பளீச் தரும் பிளீச்

Image

இம்புட்டுத் தான் ரகசியம்

அழகு நிலையங்களுக்குப் பலர் செல்வதே பிளீச் அல்லது ஃபேஷியல் செய்வதற்குத்தான்.  இதெல்லாம் எதற்காக செய்யப்படுகிறது, உடலுக்கு ஏற்றதா என்பதை  அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். எல்லோரும் இதனை செய்கிறார்கள், அதனால் நானும் செய்கிறேன் என்றில்லாமல் இதனை பற்றி அறிந்து கொண்டால், மிகச் சரியான நேரங்களில் மட்டும் இதனை செய்து கொண்டு நல்ல பலன் அடைய முடியும்.

முகத்தில் ஏற்படும் கருமையைப் போக்கவும், வெயிலில் அலைந்து உடல் கருப்பாவதை நீக்கவும், முகம் பளபளப்பாகத் தோற்றமளிக்கவும், ‘பிளீச்’ செய்யப் படுகின்றது. சிலர் பிளீச் செய்து கொள்வதால் தோல் சுருங்கும், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என சொல்வார்கள்.

சிலருக்கு உண்மையில் தோலில் திட்டுதிட்டாக  தேமல் போன்று நிறம் மாற வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதற்குக் காரணம் பிளீச் செய்வது அல்ல. தரமான கிரீம்கள் உபயோகப் படுத்தவில்லை என்பதுதான் அர்த்தம். அதனால் மிகச் சரியான கிரீம்கள் பயன்படுத்தி மாதம் ஒரு முறை பிளீச் செய்வது கண்டிப்பாக சருமத்திற்கு கெடுதல் செய்யாது.

பார்லருக்குப் போய்தான் பிளீச் செய்ய வேண்டும் என்பது அவசியம் அல்ல, வீட்டிலேயே கூட செய்து கொள்ள முடியும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட பிளீச் செய்து கொள்வது நல்லது.  தரமான கிரீம் வாங்கி, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘ஆக்டிவேட்டர்’ எனப்படும் அம்மோனியா கலந்த பவுடரை  கலந்து கொள்ள வேண்டும். கை விரலால் கண், புருவம், உதடு ஆகியவை தவிர கழுத்துப் பகுதிகளில் தடவி,15 அல்லது 20 நிமிடம் கழித்து ஈர டவலால் கிரீமைத் துடைத்து எடுக்க வேண்டும். பின்பு ஒரு ஐஸ்கட்டியை பிளீச் செய்த பகுதிகளில் 2 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பிளீச் செய்த அன்று முகத்திற்குச் சோப்பு போட்டு கழுவக்கூடாது என்பது முக்கியமாகும். முகத்திலுள்ள சிறு முடிகள் ‘பிளீச்’ ஆகி, சற்றுத் தங்க நிறத்தில் முகம் பளிச்சென தெரியும். ஆண்கள் தங்கள் மீசை, கிருதா ஆகிய இடங்களில் கிரீம் படாமல் மற்ற இடங்களில் தடவலாம். தலைமுடியில் இந்த கிரீம் படாதபடி பார்த்துக் கொள்வது அவசியம்.

கை, கால்களுக்கு சில பெண்கள் பிளீச் செய்ய விரும்புகிறார்கள். கிரீம் விலை அதிகம் என்பதால் பவுடர் பிளீச் செய்யலாம். முகத்திற்குப் பிளீச் செய்யப் பயன்படும் பவுடருடன் கால் பங்கு அம்மோனியா, முக்கால் பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு கலந்து பிரஷ் கொண்டு கால், கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்துக் கழுவிவிட வேண்டும். மாதம் இருமுறை மட்டும் பிளிச் செய்வது போதும். அளவுக்கு மீறினால் அழகுக்கு ஆபத்து.

Leave a Comment