• Home
  • அரசியல்
  • ’ஆடு’ அண்ணாமலைக்கு எதிரான கருப்பு ஆடுகள்

’ஆடு’ அண்ணாமலைக்கு எதிரான கருப்பு ஆடுகள்

Image

நிறம் மாறும் ஆதரவாளர்கள்.

அண்ணாமலை லண்டனுக்குப் போன இரண்டே நாட்களில் தமிழக பா.ஜ.க.வின் முகம் மாறிவிட்டது. இதுவரை அமைதியாக வாய் பொத்தி இருந்த பா.ஜ.க. புள்ளிகள் இப்போது வெளியே வந்து ஆவேசமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதை பார்த்து எடப்பாடி டீம் சிரிப்பாய் சிரிக்கிறது.

அண்ணாமலை என்ற ஆட்டுக்கு எதிராக கட்சிக்குள் எத்தனை கருப்பு ஆடுகள் இருந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் வரிசையாக வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் அத்தனை பேரும் ஒன்றுசேர்ந்து, அண்ணாமலைக்கு எதிராகத் தீர்மானமே போடுவார்கள் என்று கூறும் அளவுக்கு காட்சிகள் மாறுகின்றன.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று அண்ணாமலை லண்டனுக்குப் போகும் முன்பு சத்தியம் செய்துவிட்டுப் போனார். இப்போது ஹெச்.ராஜா தொடங்கி ராம சீனிவாசன் வரையிலும், ‘கூட்டணியை டெல்லி முடிவு செய்யும்’ என்று தைரியமாகப் பேசுகிறார்கள். பதவியே கிடைக்காத தமிழிசை அக்காவும் கொண்டாட்டத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். அண்ணாமலை லண்டனுக்குப் போன பிறகே சீனியர்கள் முகத்தில் சிரிப்பு வந்திருக்கிறது.

இந்த நிலையில் இது வரை அண்ணாமலைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இளைஞர்கள், ‘அண்ணாமலை வரும் வரையில் கட்சி நடவடிக்கையில் ஈடுபடப் போவதில்லை’ என்று ஒட்டுமொத்தமாக சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இது குறித்து சமூகவலைதளத்தில், ‘’அண்ணாமலை இங்கே இருந்தபோது கட்சியில் பலர் வேறு ஒரு ரூபத்திலும், அவர் வெளி நாடு சென்றதும் வேறு ரூபத்தில் இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. சமூக வலைதள ஆதரவாளர்கள் பாஜகவிற்கு எவ்வளவு முக்கியம் என்பதும், எங்களது வேலைகள் என்ன என்றும், தலைவர் அண்ணாமலைக்கு மட்டுமே தெரியும். நாங்கள் என்ன செய்வோம்’’ என்று புலம்புகிறார்கள். அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான நபர்களும் இப்போது ஹெச்.ராஜாவுடனும் தமிழிசையுடனும் கை கோர்த்து நிற்கிறார்கள். இதையடுத்து யாரை நம்புவது என்று புரியாமல் தடுமாறுகிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

Leave a Comment