• Home
  • அரசியல்
  • அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்தில் பா.ஜ.க. உறுதி..?

அரிட்டாபட்டி டங்க்ஸ்டன் சுரங்கத்தில் பா.ஜ.க. உறுதி..?

Image

ஒன்று சேரும் தமிழகக் கட்சிகள்

மேலூர் மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கத்தை வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் விட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. வரும் 9ம் தேதி கூடயிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தின் முதல் நாளிலேயே மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘’கனிமத் துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இந்த நோக்கத்தை உறுதி செய்வதற்காக ஒன்றிய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் இதர முகமைகள் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியிலும் பின்பற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளது சுரங்கங்கள் அமைச்சகம்.

இதன்மூலம் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஹிந்துஸ்தான் ஜிங்க் லிலிடெட் நிறுவனத்திற்கு வழங்கிய ஏலத்தை ரத்து செய்ய முடியாது என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளது ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம்.  தமிழ் மற்றும் தமிழர் வரலாற்றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களை உள்ளடக்கிய இடம்தான் இந்த கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயிலாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் ஒன்றிய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கிறது. 

தமிழ் மற்றும் தமிழர் உணர்வுகளையும் உரிமையும் துச்சமென மதிக்கும் பா.ஜ.க. அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும்.  அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத்துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள்.

பா.ஜ.க. அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது.  அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’’ என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment