என்ன செய்தார் சைதை துரைசாமி – 186
மேயர் சைதை துரைசாமி சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் எடுத்துக்கொண்ட அதேநேரம், பறவைகள் மற்றும் உயிரினங்கள் மீது அதீத அன்பு கொண்டவர். சைதை துரைசாமியின் வீட்டு மொட்டை மாடியில் எப்போதும் பறவைகள் உலா வருவதைக் காண முடியும். பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பதை வாழ்நாள் முழுவதும் ஒரு கடமையாக தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்.
சிட்டுக்குருவி, மைனா, கிளி, புறா போன்ற பறவை இனங்கள் மனிதர்களுடன் சகஜமாக உலா வந்த காலம் நகரங்களிலும் இருந்தது. இட நெருக்கடி, உணவு பிரச்னை, கதிர்வீச்சு, பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் சென்னையில் காகம் தவிர வேறு பறவை இனங்களைப் பார்க்கவே முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற சைதை துரைசாமி மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் வகுத்தது போலவே பறவை இனங்கள் பெருகுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்தார்.
பூங்காக்களில் செடி, கொடிகள் நிரம்பி வழிவதற்கு ஏற்பாடு செய்த சைதை துரைசாமி, அங்கேயே பறவைகளுக்குத் தானியம் வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்தார். போதிய அளவு பசுமை, உணவு, நீர் மற்றும் பாதுகாப்பு போன்றவை இருந்தால் பறவைகள் நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து இத்தகைய செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தார். மேயர் சைதை துரைசாமி எதிர்பார்த்தது போலவே பூங்காக்களில் மாலை நேரங்களில் நிறைய பறவைகள் தஞ்சம் அடைவதற்கு வரத்தொடங்கின.
சென்னையைப் பசுமையாக்குவதற்கு மாநகராட்சி மற்றும் அரசு மட்டும் முயற்சி செய்வது போதவே போதாது என்பது மேயர் சைதை துரைசாமிக்கு நன்கு புரிந்தது. எனவே, பொதுமக்களையும் மாணவர் சமுதாயத்தையும் சுற்றுசூழல் மேம்பாட்டுக்குக் களம் இறக்குவதற்கு விரும்பினார். ஏனென்றால், மக்கள் விழிப்புணர்வு மட்டுமே நிரந்தரத் தீர்வு என்பதில் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். சென்னையை பசுமைப் போர்வையாக்கும் முயற்சியில் மாணவர்கள், இளைஞர்களையும் இணைத்து செயல்படுவதற்குத் திட்டமிட்டார்.
- நாளை பார்க்கலாம்.