இனிது, இனிது… வாழ்வு இனிது.
குறைந்த காலமே இந்த பூமியில் வாழ்ந்தாலும், தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் படைத்தவன் மகாகவி பாரதி. வறுமையுடன் போராடினான் என்றாலும், ஒவ்வொரு நொடியையும் அவனுக்குப் பிடித்த வகையில் வாழ்ந்தான்.
அதனாலே எந்த மதமும் சொல்லித்தராத வாழ்க்கைத் தத்துவத்தை எல்லாம் எளிமையான மொழியில் அள்ளித்தந்தான். குட்டிக் குட்டி வார்த்தைகளில், குட்டிக் குட்டி செயல்களில் எங்கெங்கும் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறான்.
இதைவிட வேதங்களும், இதிகாசங்களும் எதுவும் சொல்லிவிடப் போவதில்லை. பாரதியின் படைப்பில் உச்சமாகக் கருதப்படும் வசன கவிதையில் இருக்கிறது, மனிதரின் வாழ்வுக்கான மகிழ்ச்சி இலக்கணம்.
இனி, பாரதியுடன் நீங்கள்.
இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,மலரும், காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை,நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று.
உயிர் நன்று. சாதல் இனிது.
