- மரணமில்லா நாட்டியத் தாரகை
இன்று பரதக்கலை தமிழகமெங்கும் கொடி கட்டிப் பறக்கிறது என்றால், அதற்கு நடிகை பத்மினியும் ஒரு முக்கிய காரணம் என்று உறுதிபடச் சொல்ல முடியும். ஏனென்றால் மேல்தட்டு நடனம், சதிர் நடனம், பிராமணாள் ஆட்டம் என்றெல்லாம் முத்திரை குத்தி வைக்கப்பட்ட நடனத்தை தன்னுடைய ஆட்டத் திறன் மூலம் இந்தியா முழுக்க உள்ள பெண்களின் மனதுக்குள் புகுத்தியவர் நடிகை பத்மினி.,
எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதைக்கு நிஜ மோகனாம்பளாக உயிர் கொடுத்து அசத்தியிருப்பார் பத்மினி. அந்தக் கதாபாத்திரத்தை, பத்மினியைத் தவிர வேறு எவரும் நடிப்பதற்கு நினைத்துக் கூட பார்க்கமுடியாது. அந்த படம் வெளியாகி இத்தனை வருடங்களாகியும், பத்மினியும் அழகும் ஆட்டமும் அசைவுகளும் உணர்ச்சிப் பிரவாகமும் காண்போரை எல்லாம் மயக்குகின்றன.
சேனல் மாற்றும் நேரத்தில் தில்லானா மோகனாம்பாள் பாடல் ஓடிக்கொண்டிருந்தால் கண்டிப்பாக கை அப்படியே நின்றுவிடும். அந்த அளவுக்கு பத்மினி அத்தனை பேரையும் கட்டிப் போட்டிருப்பார்.
அந்த படத்தில் மோகனாம்பாளாக ஜொலித்த பத்மினிக்க. ’நாட்டியப் பேரொளி’ என்று பட்டம் கொடுத்துப் பாராட்டினார்கள் தமிழ் ரசிகர்கள். பத்மினியின் கண்கள் தனி அழகு. கண்களிரண்டும் நடித்துக் கொண்டிருக்கும். அதேசமயத்தில், கால்களிரண்டும் நர்த்தனமாடும்.
கேரளாவின் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அவர். ஆனால் தென்னிந்திய மொழிகளில், தனித்துவத்துடன் ராஜாங்கமே நடத்தினார். யாருடன் வேண்டுமானாலும் நடிப்பார். எவருடன் நடித்தாலும் தனக்கான முத்திரையைப் பதிப்பார். ‘நடிப்பில் இவர் மாதிரி கிடையாது’ என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாட்டியத்திலும்கூட அப்படித்தான் இன்னமும் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நடிப்புக்கென்றே பிறந்து, நடனத்துக்கென்றே பிறந்து, தன் திறமையைக் கொடிநாட்டிய தாரகை… நாட்டியத் தாரகை.
பத்மினி, பப்பி, நாட்டியப் பேரொளி என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட பத்மினியை பால்யத்திலும் வாலிப வயது வரையிலும் கூட ‘திருவிதாங்கூர் சகோதரிகள்’ என்றுதான் அழைத்தார்கள். ‘லலிதா, பத்மினி, ராகினி’ என மூன்று சகோதரிகளும் நாட்டியத்தில் சிறந்தவர்கள். மயில் மாதிரி துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவதில் சூரப்புலிகள். மூவரில் பத்மினி தனியாக ஜொலித்தார். நடிப்பிலும் மின்னினார்.
இன்றைக்கு அவர் இல்லை என்றாலும் சலங்கை ஒலி கேட்கும் இடங்களில் எல்லாம் பத்மினி இருக்கிறார், இருப்பார்.