ஒரு பாடலில் ஒரு காப்பியத்தையே ரசிக்கலாம்

Image
  • பரதநாட்டியத்தின் தனிச்சிறப்பு

இந்தியாவின் அடையாளமாக பரத நாட்டியம் கருதப்படுகிறது. இந்த நாட்டியத்தின் அலங்காரம், இசை, பாடல் மற்றும் நவரச பாவனைகள் இதனை உலக அளவில் புகழ்பெற வைத்துள்ளது எனலாம்.  

தமிழகத்தின் சதிராட்டமே பரதக்கலையின் ஆணி வேர் என்றும் பரத முனிவரால் இயற்றப்பட்டது என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. அதேநேரம், ப என்றால் பாவம் எனப்படும் உணர்வுகள், ர என்றால் ராகம் எனப்படும் இசை, த என்றால் தாளத்துடன் இணைந்த நடனம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

ஒரு முழு காப்பியத்தையும் ஒரே ஒரு பாடலில் ஒரே ஒரு பெண் தன்னுடைய முக பாவனைகளின் மூலம் விளக்கிவிட முடியும் என்பதே பரதநாட்டியத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

சிவபெருமான் மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ருத்ர தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. அதேநேரம் சிவனின் சரி பாதியான அன்னை உமையாள் ஆடும் மென்மையான அசைவுகளுடன் கூடிய நடனத்தை லாஸ்யா என்கிறார்கள்.

உடல் அசைவுகள் மற்றும் கை முத்திரைகளை அடவு என்கிறார்கள். நிறைய அசைவுகள் சேர்ந்தது அடவு. பல அடவுகள் சேர்ந்தது ஜதி. பரதநாட்டியத்தில் சுமார் 120 அடவுகள் இருந்ததாகவும், தற்போது சுமார் 60 வகை அடவுகளே பயன்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பரத நாட்டியம் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாணியில் கற்பிக்கப்படுகிறது. அவற்றில் தஞ்சை பாணி, வழுவூர் பாணி, மைசூர் பாணி, பந்தநல்லூர் பாணி, காஞ்சிபுரம் பாணி ஆகியவை நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பாலே நடனப்பாணியிலான கலாஷேத்ரா பாணியும் தற்போது புகழ்பெற்று வருகிறது.