- ஓங்கி ஒலித்த தமிழ்க் குரல்
பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத நாட்டியம் என்பது ஆதி கலையான சதிராட்டம் என்பதை பொதுவெளியில் நிரூபித்துக் காட்டியவர் தஞ்சை பால சரஸ்வதி.
தொழில்முறையாக இசையையும் நடனத்தையும் பயின்ற தேவதாசிக் குடும்பத்தின் ஏழாவது தலை முறையைச் சேர்ந்தவர் பாலசரஸ்வதி. பாலசரஸ்வதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். இவரது தந்தை கோவிந்தராஜூலு இசைக் கலைஞராகவும் தாய் ஐயம்மாள் பாடகியாகவும் இருந்தனர்.
புகழ்பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரி. தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்றுக்கொண்டார்.
ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் காஞ்சி காமாட்சி கோயிலில் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தின் கலைநுணுக்கங்கள் அனைத்தும் கற்றுத் தேர்ந்தார். மேலை நாடுகளிலும் சென்று பரதநாட்டியத்தை அறிமுகம் செய்தார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் பாலசரஸ்வதி ஆவார்.
பரதக் கலையை பிராமண சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்வதி எதிர்த்துவந்தார். அதனாலே அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் முழு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனாலே, 1918ல் பிறந்து சிறு வயதிலேயே இந்திய அளவில் புகழைப் பெற்று உலகப் புகழ்பெற்ற கலைஞராக 1984ல் இறந்துபோன பாலசரஸ்வதி பற்றி நம்மிடம் பெரிய ஆவணங்களும் குறிப்புகளும் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
- எம். நிலா