கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க
உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப் பிடிக்காது. அலுப்பு, அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது வலி போன்றவைதான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 பாகை ஆகும். இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5 அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல், ஜுரம் என்கிறோம்.
காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம்தான் காய்ச்சல். நோய் உண்டாக்கும் அநேக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும் போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது.
காய்ச்சல் மூளையை பாதிக்குமா?
காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அநேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.
மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?
அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை, போர்வை போர்த்தி இருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கும் மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டுவிடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும்.
வெப்ப அதிர்ச்சி…
அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவை. இந்நிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவதும் அவசியம்.
காய்ச்சலுக்கு என்ன சிகிச்சை செய்யலாம்?
காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிச்சை என்பது உபாதையை குறைப்பது, வைரஸ்களை எதிர்த்து போராட உடலுக்கு துணை செய்வது மட்டும்தான். நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே, தானாகவே குணமாகிவிடும். குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது.
* காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.
* வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம். தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்
* இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம். காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகுதான் இதை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் இவ்வாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்
* பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது. இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும். இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.
* முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்கக் கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்
நோய் நாடி அறிதல்:
மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.
* எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?
* காய்ச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
* விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
* காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
* காய்ச்சல் ஏறி இறங்குகிறதா? போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.
தேவைப்படும் டெஸ்டுகள்:
* இரத்த சோதனை
* சிறு நீர் பரிசோதனை
* மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை
காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரஸ்களை அழிக்கிறது.
தொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும்.
_ஜலதோசத்துக்கு மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும் என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
என்ன சாப்பிடலாம்?
காய்ச்சல் வந்துவிட்டால், எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது. எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.
மிருதுவான, அதே சமயம் காரம், மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம். பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும், எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும்.
காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.
காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான். நோய்த் தொற்று காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை.இந் நிலையில் பால், தயிர், பருப்பு, கீரைகள், காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும். அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.
நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்
எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைப் போட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.
நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!
குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை&. இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.