அழகான பெண்ணிடம் எச்சரிக்கையா இருங்க

Image

கவுன்சிலிங் எச்சரிக்கை

சென்னையில் இருக்கும் ஒரு ஐ.டி. நிறுவனத்தின் டீம் லீடர் சீதாராமன் சந்திக்க வந்தார். 40 வயதுக்குள் நிறுவனத்தில் நல்ல பொறுப்புக்கு வந்து, கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான மனைவி, இரண்டு குழந்தைகள். கிராமத்தில் இருந்து அப்பா, அம்மாவையும் சென்னைக்கு வரவழைத்து தன்னுடன் வைத்திருக்கிறார்.

அவருக்குத்தான் இப்போது ஒரு சிக்கலான பிரச்னை.

‘’புரோகிராமிங், கஸ்டமர் சப்போர்ட் செய்வது என்னுடைய பலம். இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக பணியாற்றி நல்ல பதவியில் இருக்கிறேன். ஆனால், இப்போது. வேலையை விடுவதா அல்லது தற்கொலை செய்வதா என்று புரியாத குழப்பத்தில் தவிக்கிறேன்’’ என்றார்.

பிரச்னையை விரிவாகச் சொல்லும்படி கேட்டதும், சிகரெட் புகைத்தபடி பேசத் தொடங்கினார்.

‘’என்னுடைய டீமில் இருக்கும் சுவேதா மிகவும் அழகானவர். திருமணமாகி  ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால், வேலையில் அத்தனை திறமையானவர் இல்லை. வேலையை சரியாக செய்யவில்லை என்று கண்டிக்கும் நேரமெல்லாம், ’எனக்கு குடும்ப உறவு சரியில்லை. கணவர் வேலைக்குச் செல்வதில்லை. மனக் குழப்பத்துடன் வேலை செய்வதால் தவறு நடக்கிறது. என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கண்ணீர் சிந்துவார். வேலையில் உதவி செய்யும்படி மன்றாடுவார். அவருக்குத் தகுதி இல்லை என்றாலும், நன்றாக வேலை செய்கிறார் என்று ஏ பேண்ட் கொடுத்து, நல்ல சம்பள உயர்வு வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய குழந்தையின் பிறந்த நாள், எங்கள் திருமண நாள் போன்ற சமயங்களில் எங்கள் வீட்டுக்கு வருவார். என் மனைவியுடனும் நன்றாகப் பேசுவார்.  

அவ்வப்போது கடன் கேட்பார். கொஞ்சம் கொஞ்சமாக சில லட்சங்கள் வரை கொடுத்திருக்கிறேன். அவர் பொருளாதார நிலைமை சரியில்லை என்பதால் பணத்தைத் திருப்பிக் கேட்டது கூட இல்லை. சமீபத்தில் அவர் ஒரு வீடு வாங்கும் கடனுக்கு என்னை உத்தரவாதக் கையெழுத்து போடுமாறு கேட்டார். அதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு சில முறை கேட்டபோதும் அதே உறுதியுடன் நின்றுவிட்டேன். 

இந்த நிலையில் எனக்கு நிறுவன மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த சந்திப்பில் நான் எதிர்பாராத சில விஷயங்கள் நடந்துவிட்டது. அதாவது,  கடந்த இரண்டு வருடங்களாக சுவேதா என் மீது பல்வேறு புகார்களை மேலிடத்துக்கு வாய்மொழியாகக் கூறியிருக்கிறார்.  

அவரை நான் தவறான உறவுக்கு அழைப்பதாகவும், சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் வேலையில் இருந்து விரட்டிவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருக்கிறார். அதேநேரம், என் மீது புகார் எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் ஒரு தகவலாக மட்டும் தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கு ஆதாரமாக, அவரும் நானும் அலுவலகத்திற்கு வெளியே சந்தித்த இடம், நேரத்தை ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். அவருக்கு பணம் கொடுத்து சரிக்கட்ட முயற்சி செய்ததாகவும் சொல்லியிருக்கிறார். சுவேதா சொல்வது உண்மை என்பது போல் என்னுடைய டீம் ஆட்கள் சிலரையும் ஆதாரமாக சேர்த்திருக்கிறார்.

சமீபத்தில் அவருடைய வேலையில் நான் வேண்டுமென்றே குற்றம் சுமத்தி வேலையை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதாக ஒரு புகார் மெயிலில் அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்தே என்னை பேசுவதற்கு அழைத்திருந்தார்கள்.

சுவேதாவிடம் சமாதானம் பேசி புகார்களை வாபஸ் வாங்கச் செய்யுங்கள் அல்லது ராஜினாமா செய்துவிட்டுச் செல்லுங்கள். இது போலீஸ் கேஸாக மாறினால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்று ஒரு வாரம் டயம் கொடுத்தார்கள். நாளையுடன் அந்த நேரம் முடிவுக்கு வருகிறது. இன்னமும் எனக்கு சரியான வழி தெரியவில்லை’’ என்று சொல்லிமுடித்தார்.

‘’சுவேதா மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா..?’’

‘’அவர் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் எங்கள் டீமுக்கு வந்தார். வந்த சில நாட்கள் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால், ஓவராகப் பேசுவதும், வேலையை உருப்படியாகச் செய்யாமல் இழுத்தடிப்பதும் எனக்கு அவர் மீது ஒவ்வாமையை ஏற்படுத்திவிட்டது. அவர் நெருங்கி வ்ந்தாலும் நான் விலகியே நின்றேன். அவராகத்தான் அறைக்குள் உரிமையுடன் வந்து பேசுவார். எனக்கு அது பிடிக்கவில்லை என்றாலும் வாழ்க்கையில் கஷ்டப்படும் ஒரு பெண் என்பதால் அவர் மனதை நோகடிக்க விரும்பவில்லை…’’

‘’அப்படியென்றால், நீங்கள் எதற்காக சுவேதாவை வெளியில் சந்தித்தீர்கள்..?’’

‘’நான் அவரை எங்கேயும் அழைத்ததே இல்லை. ஆனால், தற்செயலாக வந்தேன் என்று எப்படியோ நான் செல்லும் இடங்களுக்கு வந்துவிடுவார். நான் போனில் நண்பர்களுடன் பேசுவதைக் கேட்டு அல்லது என் மனைவியிடம் பேசி விஷயம் தெரிந்து வந்திருக்க வேண்டும்… அந்த சந்திப்பு எதுவும் தற்செயல் அல்ல திட்டமிட்டது என்று இப்போது தான் புரிகிறது.’’

‘’புகார் குறித்து சுவேதாவிடம் பேசினீர்களா..?’’

‘’ஏன் பொய்யாக புகார் அனுப்பியிருக்கிறாய் என்று கேட்டதற்கு, உண்மையைத் தான் அனுப்பியிருக்கிறேன் என்று கோபமாகச் சொல்கிறார். உனக்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டதற்கு, ‘நான் அப்படிப்பட்ட பெண் இல்லை, எதுவும் வேண்டாம்…’ என்கிறார். ஏன் இப்படி பேசுகிறார் என்பதே புரியவில்லை…’’

‘’உங்கள் டீம் மெம்பர்களிடம் பேசினீர்களா..?’’

’’ஒரு சிலரிடம் பேசினேன். ’நான் அவரிடம ரொம்பவும் நெருக்கமாகப் பழகுவதாக சுவேதா எல்லோரிடமும் சொல்லி வைத்திருக்கிறார். எனவே, எல்லோரும் எங்களுக்குள் ஏதோ உறவு இருக்கிறது என்றே நம்புகிறார்கள். அவராக என் அறைக்குள் வந்து பேசிவிட்டு, நான் அழைத்துப் பேசுவதாகச் சொல்லி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறார்…’’

‘’உங்கள் மனைவியிடம் பேசினீர்களா..?’’

‘’நான் ஜொள்ளு விடுவதாகவும், ஒருசில நேரங்களில் உடலில் கை வைக்க முயற்சி செய்வதாகவும் சுவேதா என் மனைவியிடமும் முன்பே சொல்லியிருக்கிறார். அதேநேரம், என் மனைவியின் நல்ல குணத்துக்காக என் மீது புகார் சொல்லவில்லை என்று அவரையும் நம்ப வைத்திருக்கிறார்.

என் நிறுவனம் என்னை நம்பவில்லை. என் மனைவி நம்பவில்லை. என்னுடைய டீம் மெம்பர்களும் நம்பவில்லை. எந்த தவறும் செய்யாமல் வேலையை விட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.

சுவேதாவை கொன்றுவிடலாமா எனும் அளவுக்கு ஆத்திரம் வருகிறது. ஆனால், அவரிடம் கோபமாகப் பேசினால் கூட போலீஸ் ஸ்டேஷன் போய்விடுவார் என்பதாலே அமைதியாக இருக்கிறேன்.

என்னுடைய பெற்றோருக்கு இந்த பிரச்னை தெரியாது, அவர்களுக்குத் தெரியவந்தால் என்னுடைய மானமே போய்விடும். என் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கிறார்கள், பெரிய சேமிப்பும் இல்லை. எனவே தற்கொலை செய்துகொள்ளவும் மனமில்லை, வாழவும் முடியவில்லை’’  என்று முடித்தார்.

‘’சுவேதாவால் டீமை மேனேஜ் செய்துவிட முடியுமா?’’

‘’சுவேதாவுக்கு திறமை இல்லை என்றாலும் நல்ல டீம் இருக்கிறது என்பதால் இப்போதைக்கு பிரச்னை வராது. ஆனால், புதிய பிராஜெக்ட், எதிர்பாராத சிக்கல் வந்தால் சுவேதாவால் சமாளிக்க முடியாது…’’

‘’சுவேதாவின் கணவரை சந்தித்திருக்கிறீர்களா..? அவரது குடும்பம் பற்றி எவ்வளவு தெரியும்..?’’

‘’கணவர் கோபக்காரர் என்று சுவேதா சொல்வாரே தவிர, அறிமுகப்படுத்தியது இல்லை… அவரது வீட்டுக்கும் அழைத்தது இல்லை…’’

‘’இப்போது இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்..?’’

‘’நான் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் இருக்கிறது. நான் நிரபராதி என்பதை எப்படியாவது நிரூபித்து அலுவலகத்தில் மீண்டும் வேலைக்குச் சேர ஆசைப்படுகிறேன். அதேநேரம் அது சரிதானா என்பது எனக்குப் புரியவில்லை, குழப்பமாக, கோபமாக, பயமாக இருக்கிறது. செத்துப்போகலாம் என்றும் தோன்றுகிறது. எனவே, என் குழப்பத்துக்கு விடை தேடி வந்தேன்?’’ என்றார். அவரிடம் மேலும் கொஞ்சம் தகவல் சேகரித்தேன்.

‘’நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது, உங்களை இந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு சுவேதா மட்டுமின்றி வேறு சிலரும் சேர்ந்து வேலை செய்வதாகத் தெரிகிறது. ஏதோ ஒரு பெரிய திட்டத்துடன் காய் நகர்த்தி இருக்கிறார்கள்…. இப்போது மூன்று வழி இருக்கிறது. அதாவது எதிர்த்துப் போராடுவது முதல் வழி. சமாதானம் பேசுவது இரண்டாவது வழி. இந்த பிரச்னையில் இருந்து விலகிச் செல்வது மூன்றாவது வழி…’’

‘’நான் எதை தேர்வு செய்ய வேண்டும்?’’

‘’அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இரவு நேரத்தில் திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்து கழுத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகையைக் கேட்டால் என்ன செய்வீர்கள்..?’’

’’உயிர் தான் முக்கியம். எனவே, இருப்பதை கொடுத்துவிடுவேன்…’’

‘’சரியான முடிவு. எதிர்த்துப் போராடினால் ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கிறது, தோற்கவும் வாய்ப்பு இருக்கிறது. திருடர்களிடம் சமாதானம் பேசுவது முட்டாள்தனம். ஆகவே, மூன்றாவது முடிவே புத்திசாலித்தனமானது. இப்போது சூழ்நிலைக் கைதியாக நிற்கிறீர்கள். உங்கள் மனைவி, டீம் மெம்பர்கள், நிறுவனம் என எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வைத்திருக்கிறார்கள். இவர்களால் போலீஸாரையும் நம்ப வைக்க முடியும். அது உங்கள் குடும்ப வாழ்க்கையையும் எதிர்கால வேலையையும் கெடுத்துவிட முடியும்…’’

‘’அப்படியென்றால் உண்மைக்கும் நேர்மைக்கும் இடம் இல்லையா?’’

‘’எல்லா நேரத்திலும் உண்மை ஜெயிப்பதில்லை. வெள்ளம், புயல் வரும் நேரத்தில் நாம் பாதுகாப்பான இடத்துக்குப் போக வேண்டுமே தவிர, எதிர்த்து நிற்பது புத்திசாலித்தனம் அல்ல…’’

‘’இப்போது நான் வேலையை விட்டு நின்ற பிறகு என் மீது போலீஸில் சுவேதா புகார் கொடுக்க மாட்டாரா..’’

‘’நிறுவனத்தின் பெயர் கெட்டுப்போகக் கூடாது என்று நினைக்கிறார்கள். அதனால் சுவேதாவை புகார் கொடுக்க அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் அமைதியாக நிறுவனத்திலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் மனைவியிடமும் பெற்றோரிடமும் உண்மையைச் சொல்லுங்கள். அவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர்கள் உங்களுக்குத் துணையாக நிற்க வேண்டியது அவசியம்… உங்களிடம் திறமை இருக்கிறது என்பதால் நிச்சயம் புதிய வேலை கிடைத்துவிடும்…’’

‘’இந்த அவமானத்தை நான் எப்படி துடைப்பது, சுவேதாவை எப்படி பழி வாங்குவது..?’’

‘’அவமானம் என்பது ஒரு விஷயமே இல்லை. சின்னப் பிள்ளைகள் கீழே விழுந்து எழுவதை அவமானமாக நினைப்பதில்லை. அப்படி கீழே விழுந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். இப்போது உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, உங்கள் வாழ்க்கை மட்டுமே முக்கியம்.

இந்த மாற்றம் உங்களுக்கு இதைவிட ஒரு நல்ல வெற்றியைக் கொடுக்கலாம். அதேபோல் சுவேதாவை பழி வாங்கும் எண்ணத்தை கைவிடுங்கள். சாக்கடையை மிதித்துவிட்டோம் என்றால் உடனே போய் காலை கழுவுவோமே தவிர, திரும்பத் திரும்ப அதை மிதிக்க மாட்டோம். எனவே, சுவேதா போன்றவர்கள் இனியும் வாழ்க்கையில் வந்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருங்கள்…’’

நிம்மதியான முகத்துடன் வெளியே சென்றார் சீதாராமன். இரண்டே மாதத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்லிச் சென்றார். அவரது பழைய நிறுவனத்தில் இருந்து சுவேதாவை வெளியே அனுப்பிவிட்டார்கள் என்ற செய்தியும் அடுத்த சில மாதங்களில் வந்து சேர்ந்தது.

  • எஸ்.கே.முருகன்

மனவள ஆலோசகர், ஜிஜி ரிலேசன்ஷிப் கவுன்சிலிங்.

Leave a Comment