• Home
  • அழகு
  • சூரியனாக மாறுங்கள்… வாழ்க்கை வசப்படும்

சூரியனாக மாறுங்கள்… வாழ்க்கை வசப்படும்

Image

யாராவது ஒருவர் நம்மை வாழ்த்தும்போது அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அதனை ஒரு பெரும்பேறாகக் கருதுவதில்லை. எனவே, அந்த வாழ்த்தை சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம்.

யாராவது ஒருவர் பாராட்டும்போது, பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். மனம் துள்ளிக் குதிக்கிறது. உடனே நமக்கு வேண்டப்பட்டவர்களிடம் அந்த பாராட்டை பகிர்ந்துகொள்கிறோம். அதேநேரம், நம்மை பாராட்டியவருக்கு நாம் ஏதாவது பதில் நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை.

அதேநேரம், யாராவது ஒருவர் கோபம் காட்டினால், இகழ்ந்தால், கேலி செய்தால், பழி கூறினால், மனம் நோகப் பேசினால் என்ன செய்கிறோம்..?

உடனே கோபம் அடைகிறோம். உடல் துடிக்கிறது. ஆக்ரோஷம் அடைகிறோம். அவரை பழி வாங்குவதற்கு பல்வேறு வழிகளை யோசிக்கிறோம். சகல நேரமும் அந்த கசப்பான அனுபவங்களையே சிந்திக்கிறோம்.

இப்போது நாம் கொஞ்சம் சிந்திக்கலாம். நமக்கு கிடைக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கொஞ்ச நேரத்தில் மறந்துவிடுகிறோம். ஆனால், இந்த மனக்காயங்களை மட்டும் ஏன் சுமந்துகொண்டே திரிகிறோம்..?.

யாரோ ஒருவர் ஒரு நிமிடம் திட்டிவிட்டுப் போனதை நம் மனதுக்குள் பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இதனால் தூக்கமற்ற இரவுகள், அல்சர், பிரஷர் போன்ற உடல் பிரச்னைகளுடனும் நிம்மதியற்ற மனநலப் பிரச்னைகளும் உருவாகின்றன. சிலர் அடிதடியில் ஈடுபட்டு காவல் நிலையம், நீதிமன்றம் வரை போகிறார்கள்.

ஒரே ஒரு முறை அடைந்த காயத்திற்காக நாம் ஆயிரம் முறை, லட்சம் முறை, கோடி முறை வருத்தப்படுவது எப்படி சரியாக இருக்கும்..?

நாவினால் சுட்ட வடு எப்போதுமே அழியாதா..?

நிச்சயம் அழிந்துவிடும். ஆனால், அந்த பேச்சுக்கள் நம் மனதுக்குள் வேர் விட்டு செடியாக, மரமாக மாறிவிடக் கூடாது. எனவே, நம்மை காயப்படுத்தும் கசப்பான அனுபவங்களை மனதுக்குள் குடியேற அனுமதிக்க வேண்டாம். அதனை ஏற்கவில்லை, மதிக்கவில்லை என்றால், அது காற்றுக்குமிழ் போன்று அழிந்தும், மறைந்தும் போய்விடும்.

நமக்கு தேவையில்லாத ஒரு பொருளை கடைக்காரர் விற்பனை செய்ய நினைத்தால், ‘வேண்டாம்.’ என்று எத்தனை உறுதியாகச் சொல்வோமோ, அதே உறுதியுடன், ‘பிடிக்காத பேச்சுக்கள் எனக்கு வேண்டாம்’ என்று திருப்பி அனுப்புங்கள்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், சூரியனாக இருங்கள். நாய்கள் குலைப்பதால் சூரியனுக்கு எந்த கேடும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர், ஞானகுரு கவுன்சிலிங்

Leave a Comment