• Home
  • ஞானகுரு
  • முதுமை வந்ததும் குழந்தையாக மாறுங்கள்

முதுமை வந்ததும் குழந்தையாக மாறுங்கள்

Image

இயற்கையின் விருப்பம் இது தாங்க

பொங்கிச்செல்லும் நதியின் வேகத்தை ரசித்துக்கொண்டிருந்த ஞானகுருவை சந்திக்க வந்தார் முதியவர் ஒருவர். ‘என்னுடைய எல்லா கடமைகளும் முடிந்துவிட்டன. எனக்கென்று பொறுப்புகள் எதுவும் இல்லை. இப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன்’ என்கிறார்.

அவரது நிஜமான இயலாமை கண்களில் தெரிந்தது.

 ‘‘மீண்டும் குழந்தையாக மாறிவிடு…” என்றார் ஞானகுரு.

’’அதெப்படி..?’’ ஆச்சர்யத்துடன் கேட்டார் முதியவர்.

’’குழந்தைகள் பெரும்பாலான நேரங்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பதற்குத் தனியே காரணங்கள் தேவையில்லை. காரணங்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் சிரித்துக்கொண்டு இருப்பார்கள். ஆட்டுக்குட்டிகளும் நாய்க்குட்டிகளும் குதித்துக் குதித்து விளையாடுவதை பார்த்திருப்பாய். அது ஒரு மனநிலை. சும்மா இருந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை உணர்த்தும் செயல் அது. குழந்தையைப் போல் எல்லாவற்றையும் சந்தோஷமாகவும் புதிதாகவும் காணத் தொடங்கு.

எப்போதும், எதையாவது செய்துகொண்டு இரு. குழந்தைகள் அப்படித்தான் ஒரு இடத்தில் நிற்பதில்லை, இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டு இருப்பதை காண முடியும். ஏதேனும் புத்தகம் படி, போரடித்தால் தொலைக்காட்சி பார்.  நடை பயிற்சி செய். அறையில் இருக்கும் பொருட்களை மாற்றி மாற்றி அடுக்கு. இப்படி ஏதேனும் ஒன்றை செய்துகொண்டே இரு. சும்மா இருக்கும் மனநிலைதான், அடுத்து என்ன என்ற கேள்வியைக் கேட்டு உன்னை  துயரத்தில் தள்ளி அச்சமூட்டும். தினமும் செய்வதற்கு ஏதாவது இருக்கிறது என்ற மனநிலையே உன்னை சுதந்திரமாக்கிவிடும்.

உனக்கு ஏதேனும் தேவை இருந்தால் கேட்பதற்குத் தயங்காதே. இதையெல்லாம் எப்படி கேட்பது, கேட்டால் தப்பாக நினைப்பார்களே என்றெல்லாம் சிந்தனை வேண்டியதே இல்லை. குழந்தைகள் எந்த ஈகோவும் இல்லாமல் எப்படி மனதுக்குத் தோன்றியதை எல்லாம் கேட்பார்களோ, அப்படியே நீயும் கேள். அது கிடைக்குமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. கேட்பதற்குத் தயக்கம் வேண்டாம். கிடைத்தால் நல்லது, கிடைக்காவிட்டால் அதைவிட நல்லது என்றே எடுத்துக்கொள்.

தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சரியான நேரம் காலம் பார்த்து காத்திருக்காதே… எப்போதெல்லாம் உனக்கு தூங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அந்த நேரத்தில் எல்லாம் தூங்கு. சாப்பிடத் தோன்றும் நேரத்தில் சாப்பிடு.

எந்த ஒன்றின் மீதும் பற்று வைக்காதே. விளையாண்டு முடித்ததும் பொம்மையை அப்படியே கீழே வீசிவிட்டு குழந்தை கிளம்புவது போல், இந்த உடலை போட்டுவிட்டு கிளம்புவதற்கு எப்போதும்  தயாராக இரு. வாழ்க்கை சுவாரஸ்யமாகத் தெரியும்…” என்றார் ஞானகுரு.

முதியவர் சந்தோஷமாகப் புன்னகைத்தார்.

Leave a Comment