• Home
  • அழகு
  • செலவே இல்லாமல் அழகு கூந்தல்..!

செலவே இல்லாமல் அழகு கூந்தல்..!

Image

செம ஈஸி

பெண்ணின் அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பது அழகிய அடர்ந்த ஆரோக்கியமான நீண்டக் கூந்தல்…. நீண்ட கூந்தலுக்கு ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது. ஆனால், என்ன செய்வது? பராமரிக்க நேரம் இல்லாத காரணத்தால் குட்டையாக வெட்டிக் கொள்கிறார்கள்.

அப்படி அவசரப்பட அவசியமே இல்லை. ஆம், எல்லா பெண்களும் நீளமான கூந்தலை பராமரிக்க முடியும். அதேபோல், நீளமாக கூந்தலை வளர்த்துக்கொள்ளவும் முடியும். அதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்.
புதுசுபுதுசா வாங்காதீங்க…
கவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு புதிது புதிதாய் ஹேர் ஆயில்கள், ஷாம்புகள், சீரம் என்று வாங்கி தேய்த்துக்கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரே பிராண்ட் பொருட்களை வாங்கி, அவற்றையே தொடர்ந்து கடைப்பிடித்து வாருங்கள். புதுசுபுதுசாக மாற்றப்படும் நேரத்தில்தான், நிறைய பேருடைய கூந்தலில் சிக்கல் ஏற்படுகிறது.  
டிரிம் செய்வது அவசியம்

கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம் காரணமாக பலரும் வெட்டிவிடவே மாட்டார்கள். ஆனால், உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை லேசாக  ட்ரிம் செய்வது அவசியம். ஆம், இதுதான்  உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.

கூந்தலுக்கும் உணவு

கூந்தல் ஆரோக்கியத்துக்கு ஏற்ப சரியான வைட்டமின்களை  உணவில் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். போதுமான அளவுக்கு வைட்டமின் உணவு மூலம் கிடைக்க வாய்ப்பில்லை என்றால், கடைகளில் கிடைக்கும் வைட்டமின் மாத்திரைகளில்,  ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருப்பதை தேர்வு செய்து பயன்படுத்தலாம். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்ற சப்ளிமென்ட்களும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.

ஒரே ஷாம்பு

மற்ற பொருட்களில் எப்படியோ, அவ்வப்போது சிலர் ஷாம்புகளை மட்டும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் கூந்தலுக்கும், சருமத்திற்கும் ஏற்ற சரியான ஷாம்புவை கண்டுபிடித்து வாங்குங்கள். இந்த ஷாம்புவில் தேவையற்ற நிறமிகள், கெமிக்கல்கள் இருக்கக்கூடாது.

சுடுதண்ணீர் வேண்டாம்

நிறைய பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, தொடர்ந்து சுடு தண்ணீரில் குளிப்பதுதான். இது கூந்தலுக்கு ஆகவே ஆகாது. குளிர்ந்த அல்லது இதமான தண்ணீரில் குளிப்பதுதான் கூந்தலுக்கு ஏற்றது. உடலுக்கு வெந்நீர்தான் தேவை என்றால், தலைக்கு மட்டும் அதாவது கூந்தலுக்கு மட்டுமாவது சாதாரண தண்ணீர் பயன்படுத்துங்கள். நல்ல வித்தியாசத்தைக் காண முடியும்.

இயற்கை தீர்வு

கூந்தலை அலசுவதற்கு இதோ, இந்த எளிய வீட்டுப் பொருட்களுடன் தயாராகும் அழகு ஷாம்புவை பயன்படுத்திப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
மருதாணி இலை – 50 கிராம்
செம்பருத்தி இலை – 25 கிராம்
கற்றாழை சதை – கொஞ்சம்
நெல்லிக்காய் –  இரண்டு
 வெள்ளைக்கரு – 2 முட்டை
காப்பி டிக்காஷன்  – 2  ஸ்பூன்
டீ டிக்காஷன் – 2 ஸ்பூன்

தயிர் – 2 ஸ்பூன்

செய்முறை :

மருதாணி இலை, செம்பருத்தி, கற்றாழை, நெல்லிக்காய் போன்ற அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் வெள்ளைக்கரு, காபி மற்றும் டீ டிக்காஷன், தயிர் போன்றவற்றையும் கலந்து இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பு, தலை முழுவதும் படும்படி அடுக்கடுக்காய் கூந்தலை பிரித்துத் தேய்க்க வேண்டும். அப்படியே அது நன்கு காயும்வரை இள வெயிலில் உலாத்தலாம் அல்லது நன்கு காற்று படும் இடத்தில் இருக்கவும். அதன்பிறகு நன்றாக தலைமுடியை தேய்த்து, அலசி குளித்துவிட வேண்டும்.

இதனை மாதம் இரண்டு முறை தவறாமல் செய்து வந்தால் கூந்தல் நன்றாக, நீளமாகவும்  ஆரோக்கிய  பொலிவுடனும் வளரும். கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச்சத்து ,புரதம், துத்தநாகம் உள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவு சரியான நேரத்தில் உறங்கி பகலில் சரியான நேரத்தில் எழும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத மன அழுத்தத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.  இரவு முடியை தளர்த்திவிடவும். அக்கறையுடன் கவனித்துக்கொண்டால், பெண்களுக்கு மகுடம் போன்று அழகாக கூந்தல் அமைந்துவிடும். 

1 Comments Text
  • Leave a Comment