ஸ்ட்ரெஸ் தீர்க்கும் பாரம்பரியம்
லீடு : மருதாணி வைத்த பெண்களின் கையைப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கி வழியும். இந்த மருதாணிக்குப் பின்னே இருக்கும் மருத்துவமும் அறிந்துகொள்வோம்.
தமிழர்கள் குடும்ப கொண்டாட்டமான திருமணம், வளைகாப்பு, திருவிழா போன்ற நிகழ்வுகளில் மருதாணி வைப்பது இன்றும் முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. பெண்களுக்கு கை எந்த அளவுக்கு சிவப்பாகிறது என்பதில் செல்லப் போட்டியே நடக்கிறது. எல்லா பெண்களும் அழகியோ இல்லையோ, மருதாணி வைத்த எல்லா பெண்களும் அழகியாக மாறிவிடுகிறார்கள் என்பது உண்மை.
மருதாணி மகத்துவம்
மருதாணி செடியின் இலைகளை அரைத்து கையில் பூசிக்கொள்வது காலம் காலமாக இன்று வரை தொடர்கிறது. அதேநேரம், மருதாணி இலைகளை உலர்த்தி பொடியாக்கியும் விற்பனை செய்யப்படுகிறது. மருதாணியில் இருக்கும் லாசோன் என்ற இயற்கை நிறமியே தோல், நகம் மற்றும் முடிக்கு சிவப்பு அல்லது பழுப்பு நிறம் அளிக்கிறது.
மருத்துவ ரீதியாக மருதாணி வைக்கும்போது, உடலில் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது. அதனால்தான் கோடை காலங்களில் கைகளிலும் கால்களிலும் பெண்கள் மருதாணி வைப்பது வழக்கமாக இருக்கிறது.
அதிக உடல் வெப்பம் உள்ளவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் உடல் சூட்டைக் குறைக்கும் என்ற காரணத்திற்காக மருதாணி வைக்கிறார்கள். மருத்துவரீதியாக இது உண்மை இல்லை என்றாலும் உடலுக்குத் தற்காலிக குளிர்ச்சி தருவது உண்மை. இதுவே, பெண்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. சிறுவர்கள், சிறுமிகள் மருதாணி வைப்பதற்கு ஆர்வம் காட்டும் அளவுக்கு, வளர்ந்த ஆண்கள் மருதாணியின் மீது அத்தனை ஆசை காட்டுவதில்லை.
மருத்துவக் குணங்கள்
மருதாணி இலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் சில பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதேபோல் பூஞ்சைத் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. அதனால் தோல் பிரச்சினைகளுக்கு மருதாணி சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மருதாணியில் உள்ள சில இயற்கை வேதிப்பொருட்கள் அழற்சியைக் குறைக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் சிறிய வீக்கங்கள், தோல் தழும்புகள் மறைகிறது. மருதாணி பூசும்போது கிடைக்கும் குளிர்ச்சியான உணர்வு மன அழுத்தத்தை குறைக்கிறது. அதேபோல் உடல் சோர்வை தற்காலிகமாகத் தணிக்கிறது.
மாதவிடாய்க்கு முன்னதாகப் பெண்களிடம் ஒருவித எரிச்சலும் சிடுசிடுப்பும் காணப்படும். சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரும். இவற்றுக்கெல்லாம் காரணம் ஹார்மோன் இம்பேலன்ஸ்தான். இந்த நேரத்தில் மருதாணி வைத்துக்கொள்வது, மனதை இலேசாக்குகிறது. இந்த திசை மாற்று யுக்தி மூலம் ஸ்ட்ரெஸ் குறைகிறது.
மருதாணி வைக்கப்படும் நகங்கள் மற்றும் சருமத்தில் ஃபங்கஸ் இன்ஃபெக்ஷன் வருவது தடுக்கப்படுகிறது. எனவே, சருமத்தின் ஹெல்மெட் போன்று மருதாணி செயல்படுகிறது.
முன்பு மருதாணி இலைகளை அரைத்து, சின்னச் சின்ன வறட்டிகளாகக் காய வைத்து, தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயைத் தலையில் தேய்க்கப் பயன்படுத்தினார்கள். இந்த எண்ணெய் இளநரையை வரவிடாமல் தடுக்கும் தன்மை கொண்டது.
மருதாணி இலைகளுக்கும், அதன் பூக்களுக்கும் ஆழ்ந்து தூங்க வைக்கிற சக்தி இருக்கிறது. வீட்டில் மருதாணி செடி இருந்தால் அதன் மணம் சிறப்பாக இருக்கும். தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள், மருதாணிப் பூங்கொத்தைத் தலையில் அல்லது தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம்.
நிறைய பேர் தலைமுடிக்கு மருதாணி பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் சிலருக்கு இயற்கை நிறம் கிடைப்பது மட்டுமின்றி முடியின் மேற்பரப்பு பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதேநேரம், ஆனால் வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக்க முடியாது. இந்த செம்பட்டை நிறத்தை நிறைய பேர் விரும்புகிறார்கள்.
கடையில் விற்கப்படும் மருதாணி பவுடரில் அம்மோனியா சேர்க்கப்படுவதால், அது நிறைய பேருக்கு அலர்ஜி கொடுக்கலாம். எனவே, செடியில் இருந்து இலைகளைப் பறித்து அந்த மணத்துடன் கை விரல்கள், கால் விரல்களில் வைத்துக்கொள்ளுங்கள். குறைந்த செலவில் அதிக மகிழ்ச்சி தரக்கூடியது மருதாணி. இதன் அழகு எல்லோரையும் மயக்கக்கூடியது. எனவே, மருதாணி அழகைக் கொண்டாடுங்கள்.
