ஆண்களுக்கு பலம் தரும் ஆலம்

Image

அடேங்கப்பா மருத்துவக் குறிப்புகள்

ஆல்போல் தழைத்து அருகுபோல் வளரவேண்டும் என பெரியோர்கள் வாழ்த்துவார்கள். அதற்குக் காரணம், ஆலமரத்தின் அற்புதங்களே. ஆம், ஆலமரமானது காற்றில், நீரில், நிலத்தில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்களை அகற்றும் தன்மையுடையது. அது மட்டுமின்றி, சுற்றுப்புறச் சூழலில் உள்ள நச்சுத்தன்மைகளையும் நச்சை நீக்கி உயிர்க்காற்றை வெளியாக்கவல்லது.

ஆடு, மாடு, குதிரை, பன்றி, யானை, கழுதை ஆகியவற்றின் கழிவுகளை, சூரியசக்தி இழுத்து கிருமிகளை அழிக்கும். அப்போது வெளிவரும் நச்சுக்காற்றை உறிஞ்சி உயிர்க்காற்றை கொடுப்பதில் ஆலமரத்துக்கு நிகர் எதுவுமில்லை. மேலும் இது, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை படர்ந்திருக்கக்கூடியது. தாய் மரமானது சில காலத்தினால்  அழிந்துவிட்டாலும்கூட, இதன் விழுதுகள் வேரூன்றி படர்ந்து வளரும். இம்மரம் நிழலுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. காலம் காலமாக நிலைத்துநின்று வளரக்கூடியது என்பதாலே ஆலமரம் சாலையோரங்களில் அதிகம் நடப்படுகிறது. இம்மரத்தின் ஆயுள் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகும்.


மாடு கன்றுபோடும்போது வெளிவரும்  பனிக்குடம், நச்சுக்கொடி, பிள்ளைக்கொடி ஆகியவற்றை, கிராமப்புறங்களில் கோணிப்பையில் போட்டு ஆலமரத்தில் கட்டியிருப்பதை நாம்  பார்த்திருப்போம். இதை, உடுப்பு என்பார்கள். காற்றில் நிலவும் நச்சுக்காற்றைத் தடுப்பதற்காகத்தான் இதை ஆலமரத்தில்  கொண்டுபோய் கட்டுகிறார்கள். இதன்மூலம், மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. ஆலமரத்தில் கட்டும் உடுப்பு எக்காலத்திலும் நாற்றம் வீசுவது இல்லை. இதை, மண்ணில் புதைத்தால் அந்த மண் கெட்டுப்போவதுடன் நோய்க்கிருமிகளை உருவாக்கி உயிர்க்காற்றை அழித்து நச்சுக்குரிய நோயை (ஒவ்வாமை என்கிற அலர்ஜி) உருவாக்கும்.


துவர்ப்பும், கார்ப்பும் இதன் குணமாக இருக்கிறது. மலம், நீர், கரு, கர்ப்பப்பை மாசு ஆகியவற்றை வெளியேற்றும் தன்மை உடையதாக  துவர்ப்பு இருக்கிறது. சுவாசப்பை (நுரையீரல்) ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி ரத்தத்திற்கு சக்தியைக் கொடுப்பதாக கார்ப்பு உள்ளது. ஆண்களுக்கான கல்பலேகியங்கள் தயாரிப்பதற்கு இதன் விதைகள் பயன்படுகின்றன. இதன் விழுதின் நுனிப் பகுதியில் ஒரு அடி அளவு வெட்டி எடுத்து வெயிலில் காயவைக்க வேண்டும். பிறகு, அதை இடித்து பொடி செய்யவேண்டும். பின் இரவில் நூறு மில்லி தண்ணீரில் அந்தத் தூளை (அரை தேக்கரண்டி) கலக்கி வைத்துவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி 21 அல்லது 48 நாட்களுக்கு தொடர்ந்து குடித்துவந்தால், கர்ப்பப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கி,  உடல் ஆரோக்கியத்தைக் காக்கும். இது, உடல்பெருக்கும் தன்மையும் உள்ளது. மேலும், வயிற்றில் வரும் எட்டுவிதமான புண்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் இதனுடைய பட்டை பயன்படுகிறது.

ஆலம்பாலை வெள்ளைத்துணியில் நனைத்து காயவைக்க வேண்டும். பிறகு அதை கொளுத்தி சாம்பலாக்கி, அந்த சாம்பலை பல நாட்கள் ஆறாத ரணங்களுக்கு தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய்யில் குழைத்துப் போட்டால் ஆறிவிடும். மரத்தை கல்லால் குத்தி அதில் வரும் பாலை, வாய்ப்புண் அச்சரம் போன்றவற்றுக்கு தடவினால் குணமாகும். ஆலம் இலை, கொழுந்து ஆகியவையும் லேகியங்களுக்குப் பயன்படுகின்றன. ஆலமரத்தின் விழுதால் பல்துலக்க, பல் உறுதிப்படும். இதைத்தான் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள். பல் மட்டுமல்ல, உடலிலுள்ள அனைத்து அவயங்களுக்கும் ஆலமரம் உதவுகிறது. ஆகையால், ஆலமரத்தை வளர்த்து, உடல் ஆரோக்கியத்தை காப்போம்.

Leave a Comment