• Home
  • பணம்
  • வங்கிக் கணக்கும் இன்சூரன்ஸ் பாலிசி

வங்கிக் கணக்கும் இன்சூரன்ஸ் பாலிசி

Image
  • பண ரகசியம் தெரிஞ்சுக்கோங்க

வங்கிக் கணக்கு இப்போது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால் எல்லோர் கைகளிலும் ஒரு டெபிட் கார்டு இருக்கிறது. இந்த டெபிட் கார்டு என்பது நமக்கு ஒரு இன்சூரன்ஸ் கார்டாகவும் இருக்கிறது என்ற உண்மை தெரியுமா..?

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தொடங்கி தனியார் வங்கிகள் வரை அந்தந்த வங்கிகளின் விதிகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஏடிஎம் கார்டு என்று அழைக்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள். இவற்றின் வகையைப் பொறுத்து ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் வெவ்வேறு தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி பணப் பறிமாற்றம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அதையும் தாண்டி இந்த கார்டுகளின் மூலம் பயனர்களுக்கு மற்றொரு ஆதாயமும் உள்ளது. அதுதான் “டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டம்” (Complimentary Insurance Cover) என்ற பெயரில் வழங்கப்படும் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம். இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல மாதாந்திர அல்லது வருடாந்திர தவணை பணமெல்லாம் இதற்கு கட்டத் தேவையில்லை. மாறாக, நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளுக்காக வருடந்தோறும் ஒரு தொகை உங்களது வங்கியால் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.

இதிலிருந்து ஒரு பகுதி குறிப்பிட்ட பயனரின் சார்பில், வங்கி பிற காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வகித்து வரும் காப்பீடு கணக்கிற்கு சென்றுவிடும். இந்த இன்சூரன்ஸ் பணத்தையே நீங்கள் விபத்து மற்றும் உயிரிழப்பு சமயங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், டெபிட் கார்டு பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த தகவலை வங்கி தெரிவிப்பதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு விதமாக ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அதன் வருடாந்திர கட்டணம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து அந்த கார்டின் படிநிலை இருக்கும். உதாரணமாக சில்வர், கோல்டு, டைமண்ட் என்ற படிநிலையில் இது இருக்கும். இதன் அடிப்படையில் உங்களின் இன்சூரன்ஸ் தொகையும் அமையும். நீங்கள் அதிகமான கட்டணம் செலுத்தும் டெபிட் கார்டு பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதிகமான இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.  

வங்கிகள் பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து இந்த டெபிட் கார்டு காம்ப்ளிமெண்ட்ரி இன்சூரன்ஸ் கவரேஜ் என்று சொல்லும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு வங்கியின் குழுமமும் இதுபோன்ற பலன்கள் மற்றும் விதிகளை நிர்ணயிக்க முடியும்.

டெபிட் கார்டு இன்சூரன்ஸ் கவரேஜ் குறித்து அனைத்து முன்னணி வங்கிகளும் தங்களது வலைதளங்களில் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளன. அதன்படி விபத்து மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்சூரன்ஸ் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு வங்கிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப விதிமுறைகள் மாறும். அதன்படி, விபத்து நடந்த 3 மாதம் முதல் 6 மாதங்களுக்குள் பயனாளர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில்,வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுதல், தனிப்பட்ட விபத்து காப்பீடு, விமான விபத்து காப்பீடு, பொருட்களை வாங்குவதற்கான பாதுகாப்பு பொருட்கள் இழப்பு மற்றும் சேதம் உள்ளிட்டவற்றுக்காக இன்சூரன்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் எதைத் தர வேண்டும் என்பது அந்தந்த வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தால் விபத்தின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சமாக 50,000 ரூபாயில் தொடங்கி 2 கோடி வரை இன்சூரன்ஸ் பலன்கள் கிடைக்கும்.

காப்பீட்டுத் தொகையை எப்படிப் பெறுவது?

வங்கிக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு சேர்த்து சமர்ப்பித்தால் போதும். அதன் பிறகு அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிறகு அந்த பயனாளருக்குப் பணம் வழங்கப்படும். இதற்கு முக்கியமான ஒரு விதிமுறை உண்டு. அதாவது, முதலில் வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும். விபத்து நடந்த தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் சம்மந்தப்பட்ட நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் அந்த வங்கியில் விண்ணப்பிக்கத் தவறி காலம் தாழ்த்தி விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம்.

அதேபோல், இறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்கள், அரசு அடையாள அட்டைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட சில ஆவணங்கள் வங்கியால் கேட்கப்படும். இவற்றைச் சமர்ப்பிக்கத் தவறினாலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அதேபோல் அந்த வங்கியின் விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குதாரர் குறிப்பிட்ட கால அளவிற்குள் அந்த டெபிட் கார்டை ஒரு முறையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும்.

இது குறித்த தகவலை டெபிட் கார்டை வழங்கும்போது அதோடு தரப்படும் ஆவணங்களில் ஆங்கில மொழியில் வழங்குவதால் மக்கள் பெரும்பாலும் அதைப் படிப்பதில்லை. வங்கிகளும் இதை மக்களுக்கு தெரியப்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. வங்கிகளில் இருக்கும் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ரிசர்வ் வங்கியின் கடமை.

கோரப்படாத இன்சூரன்ஸ் பணம் என்ன ஆகிறது?

டெபிட் கார்டு காப்பீட்டு திட்டம் குறித்து யாருக்குமே தெரியாத நிலையில் யாருமே இதைக் கேட்டு வர மாட்டார்கள். அந்தச் சூழலில் மொத்த பணமும் குறிப்பிட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கே சென்று விடுகிறது. எனவே, இனியாவது உஷாரா இருந்துக்கோங்க.