என்ன செய்தார் சைதை துரைசாமி – 394
அரசியலில் நுழைந்த காலத்தில் இருந்தே கேளிக்கை, கொண்டாட்டம், விருந்து போன்றவற்றில் கலந்துகொள்வதற்கு மேயர் சைதை துரைசாமி ஆர்வம் காட்டியதே இல்லை. மேயர் பதவிக்கு வந்த பிறகும் அதே கொள்கையை கடைசி வரையிலும் கடைபிடித்தார் என்பதே ஆச்சர்யமான உண்மை.
ஏனென்றால் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் மற்றும் பிரபல கேளிக்கை மையங்களில் இருந்து மேயர் சைதை துரைசாமிக்கு அழைப்புகள் வரும். சிறப்பு விருந்தினராக கொஞ்ச நேரம் கலந்துகொண்டால் போதும் என்று வற்புறுத்துவார்கள். ஆனால், இந்த விஷயங்களில் ஒருபோதும் மேயர் சைதை துரைசாமி தன்னுடைய கொள்கையை விட்டுக்கொடுத்ததே இல்லை.
இத்தனைக்கும் தங்கும் அறைகள், உணவுக்கூடங்களில் மேயருக்கு என்று சலுகைகள் உண்டு. மேயர் சைதை துரைசாமி வரவில்லை என்றாலும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என யாரையேனும் அனுப்பலாம் என்றும் கேட்பார்கள். இதுபோன்ற அனைத்து கோரிக்கைகளுக்கும் மேயர் சைதை துரைசாமியிடம் இருந்து, ‘இல்லை’ என்பது மட்டுமே பதிலாக இருக்கும். எந்த சலுகைகளையும் அவர் ஏற்றுக்கொள்வதில்லை.
அதேபோன்று பிரபல தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பிரபலங்கள் ஏதேனும் காரணங்களுக்கு அன்பளிப்புகள் அனுப்பிவைப்பதும் வழக்கம். மேயருக்கு என வரும் எந்த அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்வதில்லை என்று கண்டிப்பான கட்டளை விதித்திருந்தார். ஆகவே, வரும் அன்பளிப்புகளை அப்படியே திருப்பி அனுப்பிவிடுவார். ஒவ்வொரு இலவசத்திற்குப் பின்னும் ஏதேனும் ஒரு கோரிக்கை அல்லது வேண்டுகோள் இருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வு மேயர் சைதை துரைசாமிக்கு உண்டு. அதனாலே, இன்று வரை அவர் யாரிடமும் எதற்காகவும் அன்பளிப்பு வாங்கியதே இல்லை. இன்று வரை இதனை கடைபிடித்தும் வருகிறார்.
- நாளை பார்க்கலாம்.