என்ன செய்தார் சைதை துரைசாமி – 285
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில், மாநகராட்சி நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அனைத்து செலவுகளுக்கும் தன்னுடைய சொந்த நிதியை மட்டுமே மேயர் சைதை துரைசாமி பயன்படுத்தினார் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதனால் தான் பெருநகர சென்னை மேயராக இருந்த மேயர் சைதை துரைசாமி மீது எந்த ஒரு லஞ்சக் குற்றச்சாட்டும் எழவில்லை.
‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தார். அதை தன்னுடைய பதவிக்காலம் முழுமையாகக் காப்பாற்றினார். தன்னுடைய மேஜையில், ‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று எழுதிவைத்தது மட்டுமின்றி, லஞ்சம் கொடுக்காமல் மாநகராட்சியில் அனைத்து மக்கள் பணிகளும் சரியாக நடக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மாநகராட்சிப் பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் நிகழக்கூடாது என்று விரும்பினார்.
அதனால் தன்னுடைய அறைகளில் மட்டுமின்றி மாநகராட்சி மற்றும் வார்டு அலுவலகங்களில் எல்லாம் லஞ்சத்துக்கு எதிராக விழிப்புணர்வு கொண்டுவந்தார். அந்த வகையில், ‘’யாருக்கும் லஞ்சம் கொடுக்கக்கூடாது’’, ‘’சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’’ போன்ற வாசகம் தாங்கிய தகவல் பலகைகள் மாநகராட்சி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இப்படியொரு தகவல் பலகை வைப்பது ஊழியர்களுக்கு அவமானமாக இருக்கும், தர்மசங்கடத்துக்கு ஆளாவார்கள் என்றெல்லாம் அதிகாரிகள் கூறி, இந்த நடவடிக்கையை நிறுத்த முயன்றார்கள். ஆனால், அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இப்படி தகவல் பலகை வைக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி, அத்தனை இடங்களிலும் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். மாநகராட்சி அலுவலகங்களில் இப்படி ஒரு தகவல் பலகை பார்த்து மக்கள் ஆச்சர்யப்பட்டார்கள், லஞ்சம் கேட்பவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். இவை எல்லாமே மேயர் சைதை துரைசாமியால் வந்த மாற்றங்கள்.
- நாளை பார்க்கலாம்.