சென்னையில் நான்கு மண்டலங்களில் ஆயுஷ் சேவை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 122

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே அலோபதி மருத்துவம் மக்களிடம் பிரபலமானது. அதுவரையிலும் கை மருத்துவம் மற்றும் சித்த வைத்தியம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறையே நம் மக்களின் நோயைத் தீர்த்து வைத்தன.

அலோபதி மருத்துவம் உடனடி தீர்வு தருவதால் மக்கள் அதனையே அதிகம் நாடுகிறார்கள். அதேநேரம், காய்ச்சல், சளி, தலைவலி போன்ற சாதாரண நோய்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள் கொடுக்கப்படுவதால் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால், அதன் பாதிப்பை மக்கள் உணர்வதில்லை. அது மட்டுமின்றி, நமது பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மகிமைகளையும் மக்கள் மறந்துவிட்டர்கள்.

எனவே அலோபதி சிகிச்சையினால் கைவிடப்பட்டவர்கள் அல்லது அலோபதி சிகிச்சைக்கு செலவழிக்க முடியாதவர்கள் மட்டுமே சித்தா, ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவத்தை நாடும் சூழல் நிலவியது. சாதாரண காய்ச்சல், ஜலதோஷம் முதலான அனைத்து நோய்களுக்கும் ஆயுஷ் மருத்துவத்தில் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் தீர்வு கிடைக்கிறது என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளாமல் இருந்தனர். இந்த நிலையை மாற்ற விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.

சித்த வைத்தியம் மற்றும் இயற்கை மருத்துவத்தின் மூலம் தன்னுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வரும் மேயர் சைதை துரைசாமி, தன்னைப் போலவே சென்னை மக்களும் நலமுடன் திகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே, பக்கவிளைவுகள் இல்லாத சிகிச்சை முறைகளான சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம், இயற்கை யோகா போன்ற ஐந்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து ஆயுஷ் இயற்கை மருந்தகங்களை மாநகராட்சி மருத்துவமனையில் தொடங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

மக்களுக்கு குறைந்த செலவில் நிறைந்த சேவை தரும் ஆயுஷ் சிகிச்சை முறை அறிமுகமாக வேண்டும் என்பதற்காக பெருநகர சென்னையின் நான்கு மண்டலங்களில் ஆயுஷ் மருத்துவ மையத்தைத் தொடங்கினார். இதன் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சேவை வழங்கப்பட்டது.

மாநகராட்சி மூலம் ஆயுஷ் திறக்கப்பட்ட காரணத்தால் மக்களுக்கு இந்த மருத்துவ முறையின் மீது நம்பிக்கை அதிகரித்தது. முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் ஆயுஷ் மூலம் பலனடையத் தொடங்கினார்கள். அவர்களுக்கு கிடைத்த ஆரோக்கியத்தைப் பார்த்து மற்றவர்களும் வரத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் பிரதமர் மோடி ஆயுஷ் மருத்துவத்தை இந்தியா முழுக்க அறிமுகம் செய்தார். இதைக் கண்ட பொதுமக்களும் மீடியாக்களும் சைதை துரைசாமியின் தீர்க்கதரிசன நடவடிக்கையைக் கண்டு ஆச்சர்யப்பட்டு பாராட்டினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment