நவீன மருத்துவத்தால் 70 வயதைத் தாண்டி வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே, முதியோருக்கான புதிய மருத்துவக் காப்பீடு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்தும் அறிந்துகொள்வோம்.
கடந்த 2000 ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி உயிர் வாழும் வயது 62.28 என இருந்தது. இது 2010ம் ஆண்டு 66.43 என உயர்ந்தது. 2020ம் ஆண்டு 69.73 என இருந்த ஆயுள் விகிதம் இந்த 2024ம் ஆண்டு 70.62 என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை விட இலங்கை மக்களின் சராசரி வாழ்க்கை வயது 77.73 என்பது குறிப்பிடத்தக்கது.
இனி 70 வயதைத் தாண்டியவர்கள் அதிகம் பேரை காண முடியும். இந்த நிலையில் 70 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு நன்மை தரும் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆயுஸ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயது தாண்டிய மூத்த குடிமக்களுக்கு 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் சேருவதற்கு 70 வயது ஆகியிருந்தாலே போதுமானது. இதற்கு வேறு எந்த தகுதியும் கிடையாது. குறிப்பாக ஒருவரது வருமானம், சொத்து விபரம், வேறு திட்டத்தில் பயன் அடைபவர் என எந்த தடையும் இல்லாமல், எல்லோரும் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைய முடியும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்புபவர்கள், NHA | Official website Ayushman Bharat Digital Mission (abdm.gov.in) இணையதளத்திற்குச் சென்று ஆதார், ரேஷன் அட்டை தகவல்களை உள்ளிட்டால், ஒவ்வொரு நபருக்கும் தனி அடையாளம் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்பட்ட அடையாளத்தின் அடிப்படையில் மின்னணு கார்டு வழங்கப்படும்.
இந்த காப்பீட்டு அட்டை வைத்து எந்தவொரு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 5 லட்சத்திற்கு மேல் செலவுகள் ஏற்ப்பட்டால், அந்தத் தொகையினை மட்டும் கையில் இருந்து கொடுக்க வேண்டியிருக்கும். இந்த 5 லட்சம் ரூபாய் உங்களுக்குப் போதாது என்று நினைத்தால், டாப் அப் கவர் எடுத்துக்கொள்ளலாம். அதாவது 5 லட்ச ரூபாய்க்கு மேல் எவ்வளவு பணத்துக்கு இன்சூரன்ஸ் எடுக்க விரும்புகிறீர்களோ, அதற்கு மட்டும் பணம் செலுத்தி கார்டின் தொகையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
60 வயதுக்கு மேற்ப்பட்ட நபர்களுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது அதிக செலவு வைக்கும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் அதிக பணத்துக்குக் குறைவான செலவில் கார்டு எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த காப்பீடு மூலம் மருத்துவம் தொடர்பான பரிசோதனை, மருத்துவமனையில் முன்கூட்டி 3 நாட்கள் தங்கியிருக்கும் செலவு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு 3 நாட்கள் தங்குவதற்கான செலவு, அறுவை சிகிச்சை, ஐ.சி.யூ. செலவு, மருத்துவர் கட்டணம் போன்ற எல்லாமே பெற்றுக்கொள்ள முடியும். எனவே, பெற்றோர் அல்லது உறவினர்கள் 70 வயதைத் தொட்டிருந்தால் உடனடியாக இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட சில முக்கிய மருத்துவமனைகளில் கலைஞர் காப்பீட்டுத் திட்டமே உடனடியாக செல்லுபடியாகிறது. இந்த பாலிசி குறித்த அறிவிப்பு இப்போது தான் வெளியாகியுள்ளது. இதுவும் அதே அளவுக்கு பயன் தர்க்கூடியது. ஆகவே, மறக்காமல் இந்த காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவத்தில் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் லாபம். எனவே, இப்பவே எடுத்துக்கோங்க.