• Home
  • தமிழ் லீடர்
  • அருந்ததியர் ஒதுக்கீடு செல்லும். வன்னியர் ஒதுக்கீடு செல்லாது.

அருந்ததியர் ஒதுக்கீடு செல்லும். வன்னியர் ஒதுக்கீடு செல்லாது.

Image

எடப்பாடி ராமதாஸ் தேர்தல் நாடகம்.

பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடாக அருந்ததி இன மக்களுக்கு வழங்கப்பட்ட 3% ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு(ஏழு பேர் கொண்ட அமர்வு) இறுதித் தீர்ப்பளித்துள்ளது. இந்த நேரத்தில், அப்படியென்றால் வன்னியர் உள் ஒதுக்கீடும் செல்லுபடியாகுமே என்று கேள்வி எழுகிறது.

அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் பதில். ஏன் என்பதற்கு அருந்ததியர் உள் ஒதுக்கீடு கடந்துவந்த பாதையைப் பார்த்தாலே அறிந்துகொள்ள முடியும்.  

கடந்த  2009 ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் முன்மொழிந்து, கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் அருந்ததி இன மக்களுக்கான 3% உள் ஒதுக்கீட்டுச் சட்டம்.

இதை ஆதிக்கச் சாதியினர் கடுமையாக எதிர்த்தார்கள். பட்டியலின மக்களில் பாகுபாடு இல்லை.  எங்களுக்குள் ஏன் சிண்டு முடிகிறீர்கள்?  நாங்கள் எல்லாம் பாய் – பாய் சகோதரர்கள், என பட்டியல் இன மக்களில் இருந்த பெரும் பிரிவினர் கடுமையாக எதிர்த்தனர். 

அந்த நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிறகு அந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சேலத்தைச் சேர்ந்த ஜே.யசோதா 2015ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 2020 மார்ச் மாதம் 16-ஆம் தேதி இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.

இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதைப் போலவே, அந்த வகுப்பினரின் உட்பிரிவுகளில் உள்ளவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கலாம் என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். கூட்டாட்சி கட்டமைப்பில் இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறும் வகுப்புகளின் உட்பிரிவில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரும் சட்டங்களை இயற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்பதால் அதிக நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு இந்த வழக்குகளை அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்தது. பட்டியலினத்தவர்களுக்கு உள்இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும்கடந்த 4 ஆண்டுகளாக விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2009ஆம் ஆண்டு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது

இந்த சட்டம் ஏன் செல்லுபடியானது என்றால், திமுக அரசு ஏனோ தானோவெனவெல்லாம் இந்தச் சட்டத்தை இயற்றிவிடவில்லை. இதற்காகவே சிறப்பு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த ஆணையம் கொடுத்த ஆய்வறிக்கையைப் பெற்று, உண்மையானத் தரவுகளை அதில் கோர்த்து, சரிபார்த்து, சட்ட வரைவறிக்கையை தாக்கல் செய்து, விவாதம் நிகழ்த்தி,  பின் சட்டமன்றத்தில் பெரும்பாலோருடைய ஆதரவுடன் அந்த உள் ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது !

எனவே பட்டியலின மக்களின் பெரும்பிரிவினர் தொடுத்த எதிர் மனுக்கள் அத்தனையையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. உச்சநீதிமன்றமும் அதையேச் செய்தது.  இருந்தாலும் நாளை பின் இது பெரிய சச்சரவாகப் போய்விடக் கூடாதே என்று அரசியல் சாசன அமர்வு விசாரணைக்குட்படுத்தப்பட்டது.  அங்கும் நல்ல தீர்ப்பே வந்துள்ளது !

அப்படியென்றால் வன்னியர் ஒதுக்கீடு சட்டம்?

2021 தொடக்கத்தில் அவசர அவசரமாக ஓர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. அதாவது MBC எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான மொத்த 20% ஒதுக்கீட்டில், 10.5 % வன்னியர்களுக்கு மட்டும் என்கிற உள் ஒதுக்கீட்டுச் சட்டம் அது.

அது நிறைவேற்றப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதாவது கூட்டுக் களவாணிகளான அதிமுக + பாமக + பா.ஜ.க. மூவரும் இணைந்து திட்டமிட்டு நடத்திய நாடகம் அது.

எந்த ஆணையத்தையும் அமைத்து தரவுகள் எதையும் சரிபார்க்காமல், வன்னிய மக்களை ஒட்டுமொத்தமாக ஏமாற்ற நிகழ்த்தப்பட்ட பொய்க்கூத்து அது அதனால் தான் அன்று அமைச்சராக இருந்த உதயகுமார், ’இந்தச் சட்டம் ஆறு மாதங்கள் கூட நிலைக்காது’ என்று பச்சையாகத் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

ஏன் தெரியுமா ? வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கி விட்டால் எஞ்சியிருக்கும் 9.5% மட்டுமே ஏகப்பட்ட சாதி மக்களுக்கு கிட்டும்.  தரவுப்பூர்வமாக எதையும் நிருபிக்காமல் அப்படி செய்வது வஞ்சம். போக, தென்னாட்டில் அதிமுகவினருக்கு வாக்களிக்கும் பெரும்பாலோர் கள்ளர் இன மக்கள். அவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர்.  இந்த அவசரச் சட்ட நாடகத்தால் அதிமுக மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர். அவர்களை ஆறுதல் படுத்தவே இப்படி சில அமைச்சர்கள் பேசினார்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவான் கதையாய் இவர்களே வன்னியர்களால்லாத பிற சாதியினரைத் தூண்டிவிட்டு நீதிமன்றத்திற்கு போகச் செய்தது. சில நொடிகளிலேயே அடிப்படைகள் ஏதுமற்ற வன்னியர்களுக்கான அந்த உள் ஒதுக்கீட்டுச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. 

ஆனால் அப்போது திமுக ஆட்சி அமைத்திருந்தது.  முதலமைச்சராக ஸ்டாலின் இருந்தார்.  கூட்டுக்களவாணிகள் அப்படியே ப்ளேட்டைத் திருப்பிப் போட்டு ஸ்டாலின் நியமித்த வழக்கறிஞர்கள் வேண்டுமென்றே சுமாராக வாதாடி கேஸைத் தோற்றுவிட்டார்கள் என்று மீண்டும் கண்ணீர் விட்டு இன்னொரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

இப்போதும் அதேபோல் ஒரு நாடகமாகத்தான் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். தேர்தல் ஆதாயத்துக்காக இட ஒதுக்கீடு கொண்டுவர முடியாது என்பதை வன்னியர்களும் புரிந்தே இருக்கிறார்கள். அதனாலே இவர்கள் பலம் வாய்ந்த தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment