வாலிபால் விளையாடி இருக்கிறீர்களா..?

Image

பாய்ச்சலில் ஒரு சந்தோஷம்


உடலை ஆரோக்கியமாகவும், சக்திமிக்கதாகவும் இருக்க விளையாட்டுகள் நமக்கு உதவுகின்றன. விளையாட்டுகள் சிறந்த மானிடப் பண்புகளை வளர்க்கின்றன. தலைமைத்துவம், ஒற்றுமை, சமாதானம், வெற்றி, தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை வளர்ப்பதில் விளையாட்டுகள் முதலிடம் பெறுகின்றன. இவற்றில் வாலிபால் விளையாட்டுக்கு ஒரு தனித்தன்மை உள்ளது. குறுகிய நொடியில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தரும் விளையாட்டு இது.


வாலிபாலை, கைப்பந்தாட்டம் என்று சொல்லலாம். கைப்பந்தாட்டம் அல்லது கரப்பந்தாட்டம் என்பது ஓர் அணிக்கு ஆறு பேர் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தைத் தட்டி எதிர்ப்பக்கம் அனுப்பும் விளையாட்டு ஆகும்.  1892ம் ஆண்டு, ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், அக்கல்லூரியில் மாணவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன். இவ்விளையாட்டில் மாணவர்கள் பந்தை கடத்திச் செல்லும் சமயங்களில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாலும், இவ்விளையாட்டை ஆட மாணவர்கள் அதிக ஆற்றலை வெளிப்படுத்த வேண்டியிருந்ததாலும், கூடைப்பந்து ஆட்டத்தை அவர் விரும்பவில்லை. மாணவர்கள் அதிக அளவில் ஆற்றலைச் செலவழிக்காமல், அதேநேரத்தில் அவர்களின் உடற்பயிற்சிக்கு உதவும் வகையில் ஒரு விளையாட்டை உருவாக்க விரும்பினார்.
பின்னர், அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராகச் சேர்ந்ததும், உள் விளையாட்டு அரங்கில் ஆடும் புதிய விளையாட்டை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தினார். அப்படி நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால். கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்து, பேட்மிண்டன் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வலை, மற்றும் பேஸ்பால் விளையாட்டில் இருந்து சில விதிகள் எனப் பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கி, அவற்றை ஒன்றாக கலந்து 1895ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்.
ஆரம்பத்தில் ‘மிண்டோனெட்’ என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டு, மிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும், ஒய்.எம்.சி.ஏ. அங்கத்தினரிடமும் பிரபலமடைந்தது. பின்னாளில் ஸ்பிரிங்பீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர் ஆல்பிரட் ஹல்ஸ்டெட், இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால்’ என்று பெயரிட்டார். 1916ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. மற்ற நாடுகளில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வாலிபால் போட்டிகள் தொடங்கியபோதிலும், இந்தியாவில் 1951ம் ஆண்டு இந்திய வாலிபால் கூட்டமைப்பு தொடங்கப்பட்ட பிறகே இந்த ஆட்டம் பிரபலமடைந்தது.

 வாலிபால் விளையாட்டில் ஒவ்வோர் அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம். இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். பாய்ந்து பாய்ந்து விளையாடும் வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரு அணிகளும் தலா ஒரு செட்டில் வெற்றி பெறும் பட்சத்தில் 15 புள்ளிகளைக் கொண்ட 3வது செட் போட்டி நடத்தப்படும்.
சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இருபுறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால்வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும்.
முழங்கை வரையிலும், விரல்களாலும் பந்தை தட்டி மேலெழும்பச் செய்யலாம். எழும்பிய பந்தை எதிரணி பக்கம்  உள்ளங்கையால் அடிக்கலாம். ஒருவர் தொடர்ந்து ஒருமுறைக்கு மேல் பந்தை தட்டக் கூடாது. பந்து தங்கள் பக்கம் வந்ததும் மூன்று தட்டுதலுக்கு மிகாமல் எதிரணி பக்கம் திருப்பியனுப்ப வேண்டும். பந்தை முதலில் தட்டுதல் ‘சர்வீஸ் (தொடக்க வீச்சு)’ எனப்படும். இது எல்லைக் கோட்டிற்கு வெளியே இருந்து வலையில் மோதாமல் எதிரணியினரின் பகுதிக்குச் செலுத்த வேண்டும். எதிரணி பக்கத்தில் இருந்து வரும் பந்தை வலை அருகிலேயே (blocking) தடுத்தாடல் எனப்படும்.

ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு வாலிபால் இருபாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஓர் அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை, தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது.

எல்லோரும் விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டு இது. விளையாடித்தான் பாருங்களேன்.

Leave a Comment