அறிய வேண்டிய அரிய தகவல்கள்
எல்லோரும் பிள்ளை பெறுகிறார்கள், வளர்க்கிறார்கள். அதன் பிறகு பிள்ளைகள் மீது குறை சொல்லிக்கொண்டே வாழ்கிறார்கள். உண்மையில் பெற்றோராக இருப்பது வாழ்க்கையின் மிகப் பெரிய பொறுப்பு. குழந்தை வளர்ப்பு என்பது அத்தனை எளிதான பயணம் அல்ல. இதை அறிந்துகொள்வதற்கு சில உண்மைகள் புரிய வேண்டும்.
பொறுமை முக்கியம்
செடி, தொட்டி மீன் போன்று பிள்ளையை வளர்க்க முடியாது. குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகுந்த பொறுமை தேவைப்படுத்துகிறது. சோறு கொடுத்தால் சாப்பிட வேண்டும், தூங்கும் நேரத்தில் தூங்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கடும் ஏமாற்றத்தைக் கொடுக்கும். இந்த நேரத்தில் பெற்றோர் மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டியது மிகமிக அவசியம்.
நல்ல குணங்கள்
எந்த பிள்ளையும் பிறக்கும் போதே நல்ல குணங்களுடன் இருப்பதில்லை. எப்படி பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பதை பெற்றோர்களைப் பார்த்து, கேட்டு கற்றுக்கொள்கிறது. எனவே, அமைதியாகவும், சகிப்புத்தன்மையுடனும் நல்ல குணங்களை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். அதைவிட முக்கியம், பிள்ளைகளுக்குக் கற்றுத்தருவதை பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டும்.
நேரம் தேவை
எல்லா நேரமும் பெற்றோர் தங்களுடன் இருக்கவேண்டும் என்பதுதான் குழந்தைகளின் எதிர்பார்ப்பு. எனவே, பெற்றோர் எப்போதும் தங்களுடன் நேரம் செலவிட வேண்டும் என்றே விரும்புகின்றனர். நமது தனிப்பட்ட விருப்பங்களையும் பொழுதுபோக்குகளையும் சில காலம் ஒதுக்கி வைத்து, அவர்களுடன் விளையாடுவதும், பேசுவதும் மிகவும் முக்கியம்.
சுயநலம்
குழந்தைகள் இயல்பாக சுயநலமாக இருப்பார்கள். எல்லாமே அவர்களுக்கு மட்டுமே என்று நினைப்பார்கள். கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கேட்டதும் எல்லாமே கிடைக்காது என்பதை புரிய வைக்க வேண்டும். பிறரைப் பற்றிச் சிந்திக்கவும், பிறருக்குக் கொடுத்து விளையாடவும் பெற்றோரே கற்றுக்கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியம்
சின்ன வயதிலிருந்தே ஆரோக்கியத்தின் முக்கியவத்தை சொல்லி வளர்க்க வேண்டும். கீரை, பழங்கள், காய்கறிகள், அசைவத்தில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை சொல்லிச்சொல்லி வளர்க்க வேண்டும். அதேபோல், உடற்பயிற்சி, தூக்கத்தின் அவசியத்தையும் உணர்த்த வேண்டும். இதை பெற்றோரும் கடைப்பிடிக்க வேண்டும்.
பெற்றோர் காட்டும் வழியில்தான் பெரும்பாலான குழந்தைகள் நடப்பார்கள். நல்ல முன்மாதிரியாக இருந்து, அன்பும் ஒழுக்கமும் கலந்த வழிகாட்டியாக இருப்பதே நல்ல பெற்றோருக்கு அழகு.
