• Home
  • பணம்
  • அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கப் போறீங்களா?

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கப் போறீங்களா?

Image

அப்படின்னா அவசியம் படிங்க

இடம் வாங்கி வீடு கட்டுவது கொஞ்சம் சிரமம் என்பதாலும், அக்கம்பக்கம் பேச்சுத் துணைக்கு ஆட்கள் வேண்டும் என்பதாலும் நிறைய பேர் அபார்ட்மெண்ட் எனப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

தங்குவதற்கு வீடு வாங்குகிறார்கள் என்றால் இதில் பிரச்னை இல்லை. அதேநேரம், எதிர்கால முதலீடு நோக்கில் வீடு வாங்கினால் அடுக்குமாடி வீடு என்பது சரியான முதலீடு இல்லை. அதற்குப் பதிலாக இடம் வாங்கிப் போட்டாலே போதும் என்பது தான் சரியான ரியல் எஸ்டேட் செய்பவர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்..?

ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஒருவர்,  ” நாம் கடன் மூலம் வீடு வாங்கும்போது, தனி வீட்டைவிட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு கடன் பெறுவது எளிது. கிட்டத்தட்ட  90 சதவிகிதம் வரை கடன் பெறலாம்.   குடிநீர், மின்சாரம் தவிர காவலாளி, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சி.சி.டி.வி. என வருடம் முழுவதும் பாதுகாப்பு வசதிகளும், பராமரிப்பு வசதிகளும் உள்ளன. திடீரென வீட்டை விற்க நினைத்தாலும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை எளிதில் விற்க முடியும். அதே நேரம் யோசிக்காமல் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்குவதால் நிறைய சிக்கல்களையும் சந்திக்க நேரிடும்.

அங்கீகாரம் பெற்ற வரைபடம் குறித்த விவரங்கள், கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற வரைபடத்தின்படி, சம்பந்தப்பட்ட அடுக்குமாடி கட்டப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மனையின் உரிமையாளர் அல்லது அவரால் பொது அதிகார உரிமை அளிக்கப்பட்ட நபருக்கு, பிரிக்கப்படாத மனைப் பகுதியை சொத்து உரிமை மாற்றம் செய்யும் உரிமை இருக்கிறதா, மனையின் மொத்த பகுதியையும் அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர்களுக்கு மாற்றம் செய்து அளித்துள்ளாரா என்பதைக் கட்டாயம் அறிய வேண்டும். கட்டடத்திற்கான பணி நிறைவுச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதையும் அறிய வேண்டும்.


இது தவிர, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது,  நிலத்தின் ஆவணம், பட்டா, வில்லங்கச் சான்றிதழ் அனைத்தையும் கட்டாயம் பெறவேண்டும். அத்துடன், கட்டட வலிமையை உறுதிசெய்யும் தர நிர்ணய சான்றிதழைப் பெறுவது அவசியம். மேலும், சென்னையாக இருக்கும்பட்சத்தில் சி.எம்.டி.ஏ. (CMDA) கட்டணம் செலுத்தப்பட்ட ரசீதும், கிராமப்புறங்களாக இருப்பின் நகர் ஊரமைப்பு (DTCP) இயக்ககத்தில் கட்டணம் செலுத்தப்பட்ட ரசீது இருக்க வேண்டும்.

முக்கியமாக, கட்டடத்தின் வரைபடம், கட்டட அனுமதி, திட்ட அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். கார் பார்க்கிங் குறித்த வரைடபடம், வீட்டின் ‘ஸ்ட்ரக்சுரல் வரைபடம்’ (Structural Drawing) மற்றும் மின்சாதன அமைப்புகளுக்கான (Electrical Drawing) வரைபடம், குடிநீர் மற்றும் வடிகால் துறை குழாய் இணைப்புகளுக்கான வரைபடம் என அனைத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். இதையெல்லாம் கவனித்து வாங்கினால் அடுக்குமாடி ஆனந்தமே” என்கிறார், மிகத் தெளிவாக.

உழைத்து சம்பாதித்த பணத்தில் வீடு கட்டுவது என்றால் அபார்ட்மெண்ட்டில் வாங்குவது என்றால், அவசரப்படாமல் நிறைய விசாரியுங்கள். அதுவே, நிம்மதியும் திருப்தியும் தரும்.


Leave a Comment