தப்பிக்கும் வழிகள்
ஏமாற்றம் அடையாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒருசிலர் தாங்கள் மட்டுமே தொடர்ந்து ஏமாற்றம் அடைவதாக எண்ணி பெரும் துக்கத்தில் ஆழ்கிறார்கள்.

டிரெயின் டிக்கெட் எடுக்கப் போனால், நான் நிற்கும் வரிசை மட்டும் மிகவும் லேட்டாகிறது. ஏதாவது பொருள் வாங்கப்போனால், நான் வாங்க நினைக்கும் பொருள் மட்டும் விற்றுபோய்விடுகிறது. நான் ஏறும் லிஃப்ட் மட்டும் அடிக்கடி ரிப்பேர் ஆகிறது என்று வருந்தும் நபர்கள் ஏராளம். இவர்கள் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, இதுபோன்ற ஏமாற்றம் எல்லோருக்கும் வாழ்க்கையில் நடந்துகொண்டேதான் இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை விரும்பும் நபர், தன்னம்பிக்கை நிரம்பியவர், பொறுமை காக்கத் தெரிந்தவர் இந்த விஷயங்களை ஏமாற்றமாக எடுத்துக்கொள்வதில்லை. இயல்பாக இதனை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட வேலைக்குப் போய்விடுகிறார்கள். ஆனால், ஒருசிலர் மட்டும் விதி தம்மை தேடித்தேடி துரத்தி ஏமாற்றப்படுவதாக தங்களை மட்டும் வருத்திக்கொள்வதுடன் நில்லாமல், குடும்பத்தினரையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றனர்.
ஏமாற்றம் ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். எதிர்பார்ப்பு இருக்கும்போதுதான் ஏமாற்றம் உருவாகிறது. அதாவது, தன்னுடைய வரிசை மட்டும் சீக்கிரம் போகவேண்டும் என்று ஒருவர் நினைப்பதுதான், அவருக்குத் தேவையற்ற எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது.
மனிதனுக்கு எதிர்பார்ப்புகள் எப்போதுமே அதிகம்தான். இறைவனிடம் கேட்டது கிடைக்காவிட்டால், பிள்ளைகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறினால், வேலை சரியாக அமையவிட்டால், கல்வியில் பட்டம் பெறாவிட்டால், பணம் வாங்கியவர் திருப்பிக் கொடுக்காவிட்டால், நண்பர்கள் உண்மையாக இருக்காவிட்டால், காதல் கைகூடவில்லை என்றால்… இப்படி பல வழிகளில் எதிர்பார்த்து, ஏமாற்றங்களைச் சந்திக்கிறான். அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ முடியாது. ஆனால், யாரிடம், எந்த அளவுக்கு எதிர்பார்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால், ஏமாற்றம் பெரிதாகத் தெரியாது.
ஏமாற்றம் எப்படிப் பிறக்கிறது? ஏமாற்றம் என்ற சொல்லில் வரும் ‘ஏ’ என்ற முதல் எழுத்தை அகற்றிப் பாருங்கள். மாற்றம் என்ற சொல் வரும். ஆம், அதனை மாற்றமாகப் பார்த்துவிட்டால் அங்கு ஏமாற்றம் வருவதில்லை.
ஏமாறுவது தவறு அல்ல, ஒருவரை ஏமாற்றுவதுதான் தவறு. ஆம், ஒரு நபர் ஏமாற்றிவிட்டார் என்றால் அதற்கு அதிகம் வருத்தம் அடையத் தேவையில்லை. ஏனென்றால், அவர் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறார் அவ்வளவுதான். அதனால் அவருக்குத்தான் இழப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் நாமும் ஏமாற வேண்டாம், பிறரையும் ஏமாற்ற வேண்டாம்.
ஒரு சினிமா சுமாராகத்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் பார்க்க அமர்ந்தால், அந்த படம் உண்மையிலே சுமாராக அல்லது மோசமாக இருந்தாலும் மனதில் எவ்வித பாதிப்பையும் உருவாக்காது. அதுவே, மிகச்சிறந்த படத்தை ரசிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் அமர்ந்தால், அது நிச்சயம் ஏமாற்றத்தையே தரும்.
ஆகவே, ஏமாற்றத்தையும் ஏமாற்றும் கலையை அறிந்துகொள்ளுங்கள். ஆம், எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொண்டால், ஏமாற்றம் காணாமல் போய்விடும்.