அலமாரியில் கண்டுபிடிக்கலாம்
ஒருவர் பொறுப்பானவரா என்பதை அறிந்துகொள்ள, அவரது அலமாரியை பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம் என்பார்கள். இது உண்மைதான். அலமாரியில் தொடங்கிவிடுகிறது ஒருவரது கலைநயம்.
உடை அலமாரியை ஒருவர் எப்படி அடுக்கிவைத்துவிட்டுச் சென்றாலும், அது சில நேரங்களில் மற்றவர்களால் கலைந்துகிடைக்கும். அதனால், மீண்டும் முதலிலிருந்தே அலமாரியை ஒழுங்குபடுத்துவார்கள். இதோ, உடை அலமாரியைக் ஒழுங்கமைக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சில ஆலோசனைகள்….
அலமாரியில் எல்லா உடைகளையும் அடுக்கிவைப்பதற்குப் பதிலாக, பருவநிலைக்கு ஏற்ற உடைகளை அடுக்கிவைக்கலாம். அடுத்து, அலுவலகத்துக்குப் பயன்படுத்தும் ஃபார்மல் உடைகள், வீட்டில் பயன்படுத்தும் கேஷுவல் உடைகள், விழாக்களுக்குப் பயன்படுத்தும் உடைகள் போன்றவற்றைத் தனித்தனியாகப் பிரித்து அலமாரிகளில் அடுக்கிவைக்கலாம். இப்படி, உடைகளை அவற்றின் வகைப்படி அடுக்கிவைக்கும்போது பயன்படுத்துவதற்கும் மிக எளிதாக இருக்கும்.
அதேமாதிரி, உடைகளைப் பருத்தி, நைலான், அதிக எடை, குறைந்த எடை போன்றவற்றின் அடிப்படையிலும் வகைப்படுத்தி அடுக்கிவைக்கலாம். சட்டைகளை முழுக்கை சட்டைகள், அரைக்கை சட்டைகள் என்று பிரித்து அடுக்கிவைக்கலாம். இப்படிப் பிரித்து அடுக்கிவைப்பது அலமாரி கலைவதிலிருந்து பாதுகாக்கும். உடைகளை அவற்றின் வகைப்படி பிரித்தபிறகு, அடுத்தகட்டமாக அவற்றை நிறங்களின் அடிப்படையில் பிரித்து அடுக்கலாம்.
இப்படி அலமாரியில் உடைகளை அடுக்கிவைத்தவுடன், அடுத்தகட்டமாக அவற்றிலிருந்து தேவையற்ற உடைகளை நீக்கிவிடுவது நல்லது. ஓர் ஆண்டுக்கு மேலாக ஓர் உடையை நீங்கள் அணியாமல் வைத்திருந்தால், அந்த உடையை அலமாரியிலிருந்து எடுத்துவிடவேண்டும். அதுபோல், ஹேங்கரில் மாட்ட முடியாத உடைகளை மடித்து உடை அலமாரியிலோ, வெளியிலிருக்கும் அலமாரியிலோ அடுக்கிவைக்கலாம்.
பெரும்பாலும் சாதாரணமாக வீட்டில் அணியும் உடைகளை இப்படி அடுக்கிவைக்கலாம். ஷால்கள், பைகள், உடைகளுக்கேற்ற காலணிகள், தொப்பிகள் போன்றவற்றையும் நிறங்கள் வாரியாக அலமாரியிலோ அட்டைப் பெட்டியிலோ போட்டு அடுக்கிவைக்கலாம். இப்படி அடுக்கி வைப்பதால், பொருட்களை அன்றாடம் பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.