ஆச்சர்ய மருத்துவம்
மடியில் லேப்டாப் வைத்து பயன்படுத்துவது இயற்கைக்கு ரொம்பவே நல்லது என்கிறார்கள். எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.
குட்டியூண்டு இடம் கிடைத்தாலும், மடியில் லேப்டாப் வைத்து பயன்படுத்தும் கலாச்சாரம் எங்கெங்கும் பெருகிவருகிறது. இது ஒரு வகையில் இயற்கைக்கு மனிதர்கள் செய்யும் நன்மை என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். ஏனென்றால், இந்த பூமியை மனிதனுக்கு உரிய இடமாக மட்டுமே மனிதன் கருதுகிறான். அதனால், இயற்கையையும் மற்ற உயிரினங்களையும் அழித்துவருகிறான். இந்நிலையில் மடியில் லேப்டாப் வைத்து வேலை செய்வதால் ஆண்மைக் குறைவு ஏற்பட்டு, அதனால் மனித சமுதாயம் சுருங்கிவிடும். இதுவே இயற்கைக்கு செய்யும் நன்மை என்கிறார்கள்.
இது குறித்து பேசும் மருத்துவர்கள், ‘’லேப்டாப்பை மடியில் வைத்து வேலைபார்ப்பதாலும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதாலும் ஆணுறுப்புக்கு நேரிடையாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு நேரிடாது. ஆனால், விந்தணுக்கள் உற்பத்தியை வெகுவாக பாதிக்கும். மணிக்கணக்கில் மடியில் லேப்டாப் வைத்து வேலை பார்த்ததால், ஆணுறுப்பைச் சுட்டுக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
விந்துப்பைகள் உடம்பிலிருந்து கீழே தொங்குவதற்கு காரணம், அது 35 டிகிரி வெப்ப நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆணுறுப்புக்கு வருகிற ரத்த ஓட்டத்தின் வெப்ப நிலையைக் குறைத்து அனுப்புகிற மெக்கானிசம்கூட ஆணுடைய உடலில் இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடி விந்தணுக்கள் வரைக்கும் உற்பத்தியாகிற அதிசயங்கள் நடக்கும் இடம் அது.
இறுக்கமான உள்ளாடை அணியும்போதும், மடியில் லேப்டாப் வைத்து வேலை பார்க்கும்போதும், விந்துப்பையின் வெப்பநிலை உடம்பின் வெப்பநிலைக்கு சமமாக வந்துவிடும். அதாவது, வெப்பநிலை அதிகரித்துவிடும்.
இதுபோன்ற நேரங்களில் விந்து உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும். இதனால்தான், வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் மாதங்களில் ஐ.வி.எஃப் சிகிச்சை செய்யமாட்டார்கள். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் கருமுட்டை வளர்ச்சிக் குறைவாக இருக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையும் குறையும். எனவே எப்போதும் மடியில் வைத்துப் பயன்படுத்துவது கூடவே கூடாது.
இதேபோல், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதால், அதிலிருந்து வெளிப்படுகிற ரேடியேஷன் விந்தணுக்கள் உற்பத்தியைக் குறைக்கிறது என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. லேப்டாப் மற்றும் செல்போனிலிருந்து வெளிப்படும் ரேடியேஷனால், விறைப்புத்தன்மை குறைபாடு என்னும் ஆண்மைக்குறைபாடு வந்துவிடுமோ என்று பயப்படத் தேவையில்லை. ஆனால், இந்தக் கதிர்கள் குழந்தையின்மையை ஏற்படுத்தலாம். அதனால், ஆண்கள் நீண்ட நேரம் லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வதையும், செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதையும் தவிர்ப்பது நல்லது…’’ என்கிறார்கள்.
பத்திரமாப் பாத்துக்கோங்க.