ஸ்பிங்க்ஸ், ஃபீனிக்ஸ் போன்றவை நிஜம் தானா?

Image

அதிசயம் அற்புதம்

உலகமெங்கும் புனைகதைகளில் பலவிதமான சக்திகளும், வினோத உருவங்களும் கொண்ட விலங்குகள்  உண்டு. அதில் அதிகம் பாப்புலரான சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாமா?

பீனிக்ஸ்:

கிரேக்க புராணங்களில் உருவம் கொண்ட இந்தத் தங்க நிறப் பறவை அன்னப் பறவையையும், கழுகையும் ஒருங்கே அமையப் பெற்ற உருவத்தில் இருக்கும். நன்மையின் வடிவமாக மட்டுமே அறியப்படும் பறவை இனம் இது. இதற்கு அழிவே கிடையாது. நன்றாக வாழ்ந்து கிழப்பருவம் எய்தியதும் தானே திடீரென்று எரிந்து சாம்பலாகிவிடும். சாம்பலில் இருந்து அடுத்து பீனிக்ஸ் பறவை உயிர் பெற்று வரும். இதன் கண்ணீருக்கு எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை இருக்கிறது. ஃபீனிக்ஸ் பறவையின் பாடல் பல கொடிய விலங்குகளை அழித்து விடும்.

பேஸிலிஸ்க்:

ரோமானிய அறிஞரான ‘ப்ளைனி தி எல்டர்’ எழுதிய ‘நேச்சுரல் ஹிஸ்டரி’ புத்தகத்தில்தான் பேஸிலிஸ்க் பற்றிய முதல் குறிப்புகள் கிடைக்கின்றன. மிகப் பெரிய பாம்பாகவோ, அரைகுறை டிராகனாகவோ உருவகப்படுத்தப்படும் பேஸிலிஸ்க்தான் பாம்புகளின் அரசன். தவளை அல்லது பாம்பு இடும் முட்டையை கோழி அடைகாக்கும்போது பேசிலிஸ்க் பிறக்கும். பிறந்த சில நாட்களிலேயே இன்ச் கணக்கில் இருந்து மீட்டர் கணக்கில் வளர்ந்து விடும் இவை பல நூறு வருடங்கள் வாழக்கூடியவை. இதன் கண்களை யாராவது நேருக்கு நேராகப் பார்த்தாலே அந்த நொடியில் மரணம் நிச்சயம். அதன் கண் தெரியும் பிம்பத்தை மட்டும் பார்த்தால் ‘கோமாஸ்டேஜ்’தான். இது தவிர இது கடித்தாலும் விஷம் மைக்ரோநொடிகளில் உயிரை எடுத்து விடும். முழுக்க முழுக்க தீயவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் விலங்காக வரும் இதனைக் கொல்வதற்கு ஃபீனிக்ஸ் பாடல் ஒன்றுதான் இருக்கிறது.

டிராகன்:

சீனர்களின் கற்பனையில் உருவான டிராகன்கள் பாம்பு உடலில் கால்களும், இறக்கைகளும் பொருந்தியவையாக இருக்கும். சீனர்களைப் பொறுத்தவரை டிராகன்கள்தான் அவர்களது காவல் தெய்வங்கள். மழை, வெயில் என ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு டிராகன் இருக்கும். அவற்றை வணங்கிவிட்டுத்தான் தங்கள் காரியங்களை ஆரம்பிப்பார்கள். மூக்கில் இருந்து தீயாகப் புகை விடும் டிராகன்கள் நல்லவர்களைக் காத்து தீயவர்களை அழிக்கும். நிறைய அறிவுரை கூடச் சொல்லும். சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கும் இறக்குமதியானது இந்த டிராகன் கற்பனை. ஆனால் அங்கே டிராகன்கள் மோசமானவை. புதையலைக் காத்து அதைத் தேடி வருபவர்களை உணவாகக் கொள்பவை. ஆனால் திறன்கள் எல்லாம் சீன டிராகன்களுக்கானவைதான்.

ஸ்பிங்க்ஸ்:

எகிப்து கற்பனைகளில் முக்கியமானது ஸ்பிங்க்ஸ். சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டது இது. எகிப்திய காஸா பிரமிடுக்கு அருகில் பிரமாண்ட ஸ்பிங்க்ஸ் உருவம் உள்ளது. ஆண் மற்றும் பெண் ஸ்பிங்க்ஸ்கள் உண்டு. இவை புத்திசாலிகள். புதிர்கள் கேட்பது பிடித்தமான விஷயம். ஏதாவது ஒரு புதையலைக் காத்துக் கொண்டிருக்கும் ஸ்பிங்க்ஸ்கள் புதிரைக் கேட்டு பதில் சொல்பவர்களை புதையல் பாதைக்கு உள்ளேயும், சொல்லாதவர்களை தன் வயிற்றுக்கு உள்ளேயும் அனுப்பும். இந்தியாவிலும் ஸ்பிங்க்ஸ் உண்டு. அதற்கு நாம் வைத்திருக்கும் பெயர் யாழி. சிங்க உடல் மனிதத் தலை, சிங்க உடல் யானைத் தலை, யானை உடல் மனிதத் தலை என பல்வேறு காம்பினேஷன்களில் இருக்கும் இந்த யாழிகள் தீமையை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

கடல் கன்னி:

கடலில் மட்டுமே வாழும் கற்பனைக் கதாபாத்திரம் இந்த கடல் கன்னி. இடுப்பு வரை மனித உடலும், அதற்குக் கீழே மீன் உடலும் கொண்டு மிகக் கவர்ச்சியாக வரையப்படுபவை இந்த கடல் கன்னிகள். தன் அழகான குரலால் பாடி வசியம் செய்யும் திறன் பெற்ற இவை மனிதர்களை கப்பலில் இருந்து உள்ளே குதிக்கச் செய்யும். கடவுளர்களைக் கூடத் தேவைப்பட்டால் பாடி வசியப்படுத்தி அவர்களது வேலையைச் செய்ய விடாமல் செய்யுமாம். கப்பலில் செல்லும் அழகான ஆண்களைக் கண்டால் பாடி வசியப்படுத்தி கடலுக்கு அடியில் இருக்கும் தங்கள் அரசாங்கத்துக்குக் கொண்டு சென்று விடும்.

யூனிகார்ன்:

கிரேக்க, லத்தீன் புராணங்களில் தோன்றிய வடிவம் இந்த யூனிகார்ன்கள். ஒற்றைக் கொம்புடைய குதிரைகள். பிறக்கும்போது தங்க நிறத்தில் இருக்கும் இவை வளர வளர வெள்ளிக்கும் பிறகு மிகத் தூய்மையான வெள்ளை நிறத்துக்கும் மாறிவிடும். வெகு வேகமாக ஓடக்கூடிய குதிரை. இவற்றின் ஒரே ஒரு முடியை வைத்து ஒரு பொருளை மூட்டை கட்டினால் எப்படிப்பட்ட கத்தியாலும் அதைக் கிழிக்க முடியாது. தனிமையிலேயே வசிக்க விரும்பும் சுயநலமே இல்லாத ஜீவன் இது. இதன் கொம்பு எப்படிப்பட்ட விஷத்தையும் முறியடித்துவிடும்.

Leave a Comment