வழக்கறிஞர் நிலா விளக்கம்
இன்று சட்டத்துறையில் எக்கச்சக்க போலிகள் உலவுகிறார்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளில் படித்துவிட்டு, முறையான பதிவுகள் செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் நிறைய பேருக்கு லாயர், அட்வகேட் என்பதில் குழப்பம் இருக்கிறது. ஒருவர் லாயர் என்றும் ஒருவர் அட்வகேட் என்றும் பேசுகிறார்கள். யார் சரி, எது சரி?
உண்மை என்னவென்றால் ஒவ்வொரு அட்வகேட்டும் லாயர்தான். ஆனால் ஒவ்வொரு லாயரும் அட்வகேட் இல்லை. அதாவது லாயர் என்றால் சட்டப் படிப்பு முடித்த எல்லோரும் லாயர்தான். சட்டப்படிப்பு முடித்தவர்கள் நீதிமன்றத்தில் மட்டுமின்றி நிறுவனங்களின் சட்டப் பிரிவில் வேலை, ஆவணங்கள் தயாரிப்பு, சட்ட ஆய்வு போன்ற பணிகள் செய்யலாம்.
ஆனால் இவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்யாமல், மற்றவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாட முடியாது. அட்வகேட் படிப்பு முடித்து, மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்தவர். தொடர்ந்து வழக்காட அகில இந்திய பார் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சிச் சான்றிதழும் பெற வேண்டும்.
கருப்பு கோட், வெள்ளை பேன்ட் அணிந்து, மற்றவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடுவது இவர்களின் தொழில். தமிழில் இவர்களையே பொதுவாக “வழக்கறிஞர்” என்கிறோம்.
அதேபோல் சீனியர் அட்வகேட் என்பது அனுபவமும் திறமையும் பார்த்து உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ வழங்கும் சிறப்புப் பட்டம் என்று சொல்லலாம்.
