பல்லுக்குப் பழமை அழகு

Image

விவரிக்கிறார் டாக்டர் செந்தில் குமார்

மருத்துவத்தில் தினம் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்துவருகிறது. இந்த நிலையில் பல் மருத்துவம் எத்தகைய பழமையானது என்பதை நினைவூட்டுகிறார் மருத்துவர்.

பல் வலியை விட பல் பிடுங்குவது ஒரு காலத்தில் மோசமான வலி கொடுப்பதாக இருந்தது. அதனால் பல் மருத்துவம் என்றாலே அச்சப்படும் நிலை இருந்தது. ஆனால், இன்று வலியே இல்லாமல் பல் பிடுங்குவது மட்டுமின்றி செயற்கை பற்கள் பதிக்கப்படுவதும் ஹைடெக் ஆகிவிட்டது. பல் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது திடீரென உருவானதல்ல, பல நூற்றாண்டு காலத் தொடர்ச்சி என்பதை வரலாறு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

பழமையிலும் பழமை

கி.மு. 7000 ஆண்டுக்கு முன்பாகவே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கு ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழைய சிந்து சமவெளி நாகரிகத்திலும் பல் மருத்துவம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பண்டைய காலத்தில் கிடைக்கப்பட்ட பற்களை ஆராய்ச்சி செய்ததில், கூர்மையான பொருட்களைக் கொண்டு பற்களைத் துளையிட்டு மருத்துவம் செய்ததற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 

சுமேரிய நாகரிகத்தில் ‘பற்சிதைவு’ என்பது ‘பல் புழுக்கள்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனர்கள் ‘அக்குபஞ்சர்’ முறையில் பல் சிகிச்சை செய்து வந்துள்ளனர். உலகில் முதன்முதலாக பல்துலக்கிகளை கண்டுபிடித்த பெருமையும் சீனர்களையே சேரும்.

மாயன் நாகரிகத்தில் பற்கள்:

மெசோ அமெரிக்காவின் பாரம்பரிய நாகரிகங்களில் மிகவும் பிரபலமானவர்கள் மாயன்கள்.  இவர்கள் தங்களின் பற்களைத் துளையிட்டு வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்களை பதித்து வைத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்று நவீன மருத்துவத்தில் இது போன்ற அழகியல் முறைகளில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்:

பழைய நாகரிகங்களில் ஒன்றான மெசபடோமியாவில் ஆட்சி புரிந்த ஹமுராபி  என்ற அரசன் முதன்முதலில் சட்ட நெறிமுறையை கல்வெட்டில் பொறித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குற்றம் செய்தால் அதற்கு தண்டனையாக அவர்களின் உறுப்புகளை வெட்டி எடுப்பதை பழக்கமாகக் கொண்டு இருந்துள்ளனர். இதனைக் குறிக்கும் விதமாக, ‘கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்’ என்று  எழுதப்பட்டுள்ளது. இன்றளவும் மக்களிடத்தில் இந்த சொலவடை பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் வாஷிங்டன் பல் விழிப்புணர்வு

வரலாற்றில் பல் மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு முக்கிய தலைவராகப் பார்க்கப்படுபவர் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன். இவர் அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட ‘பல் செட்’ அணிந்து இருந்ததாக மக்கள் நம்பினர். உண்மையில் அவர் மாற்றுப் பற்கள் பொருத்தி இருந்தார் என்றும்  யானை தந்தங்களால் செய்யப்பட்ட பற்களையும் தங்கத்தினால் செய்யப்பட்ட  பற்களையும் பொருத்தி இருந்தார். இது மக்களிடம் பேசுபொருளாக அமைந்திருந்தது.

தடயவியல் பல் மருத்துவம்

மரணத்திற்குப் பிறகும் நீண்ட ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கக்கூடிய  உறுப்பாக பற்கள் இருப்பதினால், இது தொல்லியல் மற்றும் தடயவியல் மருத்துவத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக 35 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கற்கால மனிதனின் பல்லை கொண்டு அவன் வாழ்ந்த காலகட்டத்தையும், வயதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பல குற்ற வழக்குகளில், பற்களின் தடயத்தை கொண்டு  குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவுகிறது. பெரும் இயற்கை சீற்றங்கள் மூலம் இறந்தவர்களை அடையாளம் காணவும் பற்கள் பயன்படுகிறது.

தமிழரின் வாய் கொப்பளிப்பு

இந்த வரலாற்றில் தமிழர்களுக்கும் தனித்துவப் பங்கு உள்ளது.  ’பல் போனால் சொல் போச்சு’, ’ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்பாது போன்ற  பழமொழிகளின் மூலம் பல் பராமரிப்புக்கு தமிழர்கள் கொடுத்த முக்கியத்துவமும், பற்களை அதனை சுத்தம் செய்வதற்கு ஆலங்குச்சி, வேலங்குச்சி போன்ற மரக் குச்சிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. 

நவீன மருத்துவத்தில் பல் பராமரிப்பின் முக்கிய அம்சமாக உள்ள, ‘வாய் கொப்பளித்தல்’ என்னும் நடைமுறையை நம் முன்னோர்கள் தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் எண்ணெய் கொண்டும், ஆலம்பால் கொண்டும் வாய் கொப்பளித்து வந்துள்ளனர். சாப்பிட்ட பின்னர் வாய் கொப்பளிப்பதன் பற்கள் மட்டுமின்றி மற்றும் வாயில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண் கிருமிகள் அழிக்கப்படுகிறது.

உடல் நலனுக்குப் பிரச்னை உருவாக்கும் பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்த முடிகிறது. அதோடு, வாய் துர்நாற்றம் தவிர்ப்பதற்கும் இது மிகச் சிறந்த தீர்வு ஆகும். வேப்பங்குச்சி பயன்படுத்திய நம் முன்னோர் செங்கல் தூள், கரி ஆகியவற்றை சமீப காலமாகத்தான் பயன்படுத்தியுள்ளனர். இவை பற்களுக்கு ஆரோக்கியம் தருவதில்லை.

பண்டைய காலத்திலேயே பற்களின் பாதுகாப்புக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே பற்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர்ந்துகொள்ள முடியும்.

டாக்டர் செந்தில் குமார்,

வாய், தாடை, முகம் அறுவை சிகிச்சை நிபுணர்

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை.

தொடர்புக்கு : 94435 12330.

Leave a Comment