ஆணவம் தவிர்
ஆயுதத்தால் அழிந்தவர்களைவிட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. வியாபாரத்தில் கோடிகோடியாக சம்பாதித்து ஆஹோ ஓஹோவென வெற்றி பெற்ற ஒருவர் திடீரென மண்ணோடு மண்ணாகி காணாமல் போவதை இந்த உலகம் நிறையவே பார்த்திருக்கிறது.
ஒருவர் வெற்றி பெற்றதும் பணம், புகழ், செல்வாக்கு, உறவு, நட்பு போன்றவை கேளாமலே வந்து சேரும். அப்போது ஆணவமும் சேர்ந்தே வரும். அந்த ஆணவத்தை தள்ளிவைப்பதில்தான் ஒருவரது உண்மையான வெற்றி இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் வெற்றி பெறுவது கடினம். அந்த வெற்றியை தக்கவைப்பது அதைவிட கடினம். அதனால் முதல் வெற்றி பெற்றதுமே, வெற்றியின் இலக்கணம் தனக்கு புரிந்துவிட்டதாக நினைக்கும்போது, தலைக்குள் ஆணவம் புகுந்துகொள்கிறது. ஆணவம் வெற்றியின் பலனை அனுபவிக்கவிடாமல் அஸ்திவாரத்தையே அசைத்துவிடுகிறது. அதனால் வெற்றி பெறுவதற்கு திறமையும் உழைப்பும் போதுமானதாக இருந்தாலும், அதனை தக்கவைப்பதற்கு பணிவும் பக்குவமும் தேவைப்படுகிறது. அப்போதுதான் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளவும், தேர்ச்சி அடையவும் மீண்டும் மீண்டும் வெற்றி அடையவும் முடியும்.
வெற்றிக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது விஷம். ஆம், பாம்பின் விஷம் போன்றதுதான் வெற்றி. விஷத்தை மருந்தாக மைக்ரோ அளவில் பயன்படுத்தும்போது நன்மை செய்யும், இதையே கொஞ்சம் அதிகம் எடுத்துக்கொண்டால் உயிரை மாய்த்துவிடும். அதனால் தோல்வியைவிட வெற்றியிடம்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒரு ஓட்டப்பந்தய வீரனால் காலம் முழுவதும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிக்கொண்டே இருக்கமுடியாது. ஆனால் அவன் ஒரு விளையாட்டு மையம் தொடங்கி, ஏராளமான வீரர்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து பதக்கம் பெறவைக்கலாம். இதுதான் வெற்றிக்கு அடுத்து அவன் செய்யவேண்டிய சரியான செயல். அப்படியின்றி, என்னைத்தவிர வேறு யாராலும் இத்தனை விரைவாக எப்போதும் ஓடமுடியாது என்று சொல்லிக்கொண்டிருந்தால், தோல்வி, வேதனை மற்றும் அவமானம்தான் மிஞ்சும். அதனால் வெற்றிக்குப் பிறகான குறிக்கோளை நல்லவிதமாக மாற்றி அமைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துபவர்கள் மட்டுமே தொடர் வெற்றி அடைய முடியும்.
அதற்காக வெற்றியை கொண்டாடக்கூடாது என்பது அர்த்தம் அல்ல. ஏனென்றால் வெற்றி கிடைப்பதற்கரியது. வெற்றி இன்பம் தரக்கூடியது. வெற்றிக்காக முழு ஈடுபாட்டுடன் கடுமையாக உழைத்தவர்கள், அந்த வெற்றியை ருசிக்கவும் கொண்டாடவும் வேண்டும். ஆனால் அந்த சந்தோஷத்தோடு மட்டுமே நின்றுவிடக் கூடாது. மேலும் மேலும் அடுத்தகட்ட வெற்றிக்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். அடுத்த வெற்றிக்கு முன்பைவிட அதிகமாக உழைக்கவேண்டும்.












