கம்யூனிஸ்ட் பதிலடி
நடிகர் விஜய் நீட் எதிர்ப்பு குறித்து பேசியது பா.ஜ.க.வினரிடம் பதட்டத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இதுகுறித்து அண்ணாமலை, ‘’தி.மு.க. சார்ந்த அரசியலை கையில் எடுத்தால் சந்தோஷம். தி.மு.க. கொள்கையுடன் விஜய் பேசியது பா.ஜ.க.வுக்கு உதவும். நீட் தொடர்பாக இன்னும் பல தரவுகளுடன் விஜய் பேச வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.
அதேநேரம் பிஏ. படித்தவர்களை நாய் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியது குறித்து, ‘’உதயநிதி, ஸ்டாலின் எங்கே படித்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? சர்டிஃபிகேட் இருக்குதா? இவங்களுக்கு பி.ஏ. பாஸ் பண்றவங்க எப்படி கஷ்டப்படுவாங்கன்னு தெரியாது’’ என்று ஒரு பிடி பிடித்திருக்கிறார். பதிலுக்கு தி.மு.க.வினர் மோடியின் படிப்பு, சர்டிஃபிகேட் பற்றி பேசி கிழிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் இப்படி பேசியிருப்பது ஆச்சர்யம்தான்.
அண்ணாமலை இனிமேல் தான் படிக்கப் போகிறார் என்று கிண்டல் செய்த ஜெயக்குமார் குறித்து, ‘’அ.தி.மு.க. அழிவுக்கு ஜெயக்குமார் முக்கிய காரணம். சொந்த ஊர், அமைச்சராக இருந்தவர். ஆனால், அவரது மகன் டெபாசிட் வாங்க முடியவில்லை. இவரெல்லாம் பேசுவது எதற்கு. நான் அப்டேட் ஆக இருக்க ஆசைப்படுகிறேன், படிக்கப் போகிறேன்…’’ என்று அ.தி.மு.க. மீதும் விமர்சனம் வைத்திருக்கிறார்.
அதேநேரம் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ் கொடுத்திருக்கும் பதிலடி செம வைரலாகிவருகிறது.
அவரது அறிக்கையில், ‘’யார் கேடு கெட்டவர்கள் என்பதை சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு கொலைவெறி தத்துவத்தை கொண்டாடுகிறவர்கள் நீங்கள். மகாத்மா தொடங்கி கொலைவெறிதான் உங்கள் தாரக மந்திரம். வன்முறை இல்லாமல் நீங்கள் வளர்ந்த இடம் ஒன்றைச் சொல்ல முடியுமா?
மண்டைக்காடாக இருக்கட்டும், கோயம்புத்தூராக இருக்கட்டும். ஏதேனும் விதிவிலக்கு உண்டா? வெறுப்பைத் திண்று வெறுப்பின் ஊற்றுக் கண்ணாகவே மாறிப் போன ஒரு தத்துவத்தை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறீர்கள். வென்றவர் மட்டுமே நேர்மையாளர் என்றால் நீங்கள் காங்கிரசுக்கு எதிராக போட்டியிட்டிருக்கவே கூடாது.
1952 முதல் 1975 வரை அவர்கள்தான் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தார்கள். வெல்வதுதான் நியாயம் என்றால் இந்தியாவை வென்ற பிரிட்டீஸ்காரனை விரட்டியிருக்கவே கூடாது. வெல்வதுதான் நியாயம் என்றால் தமிழகத்தில் 1967க்குப் பின் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கின்றன. அதை ஏற்றுக் கொண்டு போகவேண்டியதுதானே. எதற்காக கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கம்பு சுத்துகிறீர்கள். வெல்வது நியாயம் என்பது ஒரு கீழ்த்தரமான காக்காய் பிடிக்கும் பிழைப்புவாதம்.
நியாயத்தை வெல்வதற்காக போராடி வெற்றி பெறுவது கம்யூனிசம். பிழைப்பு வாதிகள் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து கேள்வி கேட்கக் கூடாது. கையெடுத்து கும்பிட்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும். ஜனசங்கம் என்று பெயர் வைத்துக் கொள்வது. கடை போனியாகவில்லை என்றதும் பாரதிய ஜனதா என்று உருமாறிக் கொள்வது. அதன் நோக்கம் காந்தியன் சோசலிசம் என்பது. காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஒரு கும்பிடு, காந்திக்கும் ஒரு கும்பிடு என்று பச்சோந்தித்தனம் செய்வது. சோசலிசம் அந்நியத் தத்துவம் என்பது. அதுவே எங்கள் கொள்கை என்று முழங்குவது. பிறகு சத்தம் போடாமல் அதை விட்டுவிட்டோம் என்பது.
நாங்களும் ரவுடிதான் என்பது போன்று வாஜ்பாய் விடுதலைப் போராளி என்று உதார் விடுவது. ஆதாரம் காட்டு என்றவுடன் அடங்கிப் போவது. இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அதையே பெருமையாகக் சொல்வது. இதற்குப் பெயர்தான் கேடுகெட்டதனம். ஒன்றாய் இருந்தால் என்ன? இரண்டாய் இருந்தால் என்ன? உண்மையாய் இருப்பது முக்கியம். ஒரு மலை குப்பையை எரிக்க ஒரு பொறி தீ போதும். எத்தனை குப்பை மலையும் தீயினை ஒன்றும் செய்துவிட முடியாது.
கோயிலையும் தெய்வத்தையும் அரசியலாக்கி அதில் வியாபாரம் செய்யும் ஒரு கும்பல் ராமருக்கு கோவில் கட்டிவிட்டேன் என்று எல்லோரும் வர வேண்டும் வராதவர்கள் ராமர் விரோதிகள், இந்து விரோதிகள் என்று சொன்னபோது நீ செய்வது வியாபாரம், நீ செய்வது அரசியல் பம்மாத்து. வரமாட்டேன் போ என்று சொன்ன அந்த தைரியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருந்தது. குரங்குகள் போல கூச்சலிட்டவர்களை ராமர் தோற்கடித்தாரோ இல்லையோ, அயோத்தி மக்கள் அஷ்வத் பாசி என்கிற ஒரு பட்டியலினத் தலைவரை வைத்து செவிலில் அறைந்திருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சி பற்ற வைத்த நெருப்பு உங்களைப் பதற வைத்திருக்கிறது. ஆசிபா என்கிற ஒரு அரும்பை உங்கள் ஆட்கள் கசக்கிப் போட்டார்கள். அந்தப் பெண்ணின் தந்தை நினைத்திருக்கிறான், கோவிலில் தேட வேண்டாம் அங்கு தப்பு நடக்காது என்று. அந்த நம்பிக்கையை வைத்து அந்த அரும்பைச் சிதைத்தவர்கள் உங்கள் ஆட்கள். கடைசியாக ஒரே ஒருவன், அந்த மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தான். அவன் பெயர் யூசுப் தாரிகாமி. அவன் ஒரு மார்க்சிஸ்ட். குப்பை மலைகள் ஒன்று சேர்ந்து மறைக்க நினைத்ததை அந்த ஒற்றைத் தீக்குச்சி குப்பைகளை எரித்து உலகுக்கு உண்மையைச் சொன்னான்.
அண்ணாலையாக இருந்தாலும் சரி, குப்பை மலையாக இருந்தாலும் சரி கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால் ஒன்றும் இல்லாதவர்கள். ஜெய்ஸ்ரீராம் என்ற போர்வைக்குள் பில்கிஷ் பானுவையும் அவளோடு இருந்த ஆறு பெண்களையும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி 14 பேரைக் கொன்றவர்களை உங்கள் குஜராத் அரசாங்கம் விடுவித்தது. நீதிமன்றங்கள் கூட துணைக்குப் போனது. ஒரேயொருத்தி சுபாஷினி அலி, கம்யூனிஸ்ட். நீதிமன்றத்திற்கு சென்றாள். உச்சநீதிமன்றம் தலையிட்டு அந்த 11 பேரையும் உள்ளே அடைத்தது.
அண்ணாமலை கொண்டாடிய 303 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்போது அவர்களுக்கு இருந்த 1400 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றும் கிழித்துவிட முடியவில்லை. தேர்தல் பத்திரம் அது ஏதோ திருவாசகம் போன்று புனிதமானது என்று பீற்றித் திரிந்தீர்கள். உங்கள் கொள்ளையை மறைக்க நினைத்தீர்கள். ஒரு சீட்டும் ரெண்டு சீட்டும் வைத்திருக்கிற சிபிஐ(எம்) மட்டும்தான் நீதிமன்றம் சென்றது. மோடி முதல் அண்ணாமலை வரை அத்தனை பேரையும் கலங்க வைத்தது’’ என்று காட்டம் காட்டியிருக்கிறார்.