அன்னலட்சுமி ஜெயலலிதா

என்ன செய்தார் சைதை துரைசாமி – 505

சைதாப்பேட்டை மலிவுவிலை உணவகம் சைதை துரைசாமியே எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றி அடைந்தது. உணவகத்தில் சாப்பிட்டவர்கள் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்கள். எனவே இந்த மலிவு விலை உணவகம் தமிழகம் முழுவதும் தொடங்கினால் மிகச்சிறந்த வகையில் ஏழைகளுக்குப் பயன் தரும் என்று அழுத்தமாக நம்பினார்.

அப்படியொரு வாய்ப்பு 2011 பெருநகர சென்னை மேயர் தேர்தலில் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. 2011 உள்ளாட்சித் தேர்தலில் சைதையாரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியனைவிட, 5,19,747 வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் சாதனை வெற்றி படைத்தார். அந்த தேர்தலில் சென்னையின் 200 வார்டுகளில் 31 அதிமுக கவுன்சிலர்கள் தோல்வியடைந்தனர். ஆனால், 200 வார்டுகளிலும் தி.மு.க. வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற்றார் சைதை துரைசாமி.

இத்தனை பெரிய வாக்கு வித்தியாசத்தை அறிந்த ஜெயலலிதா, உடனடியாக டெல்லி தேர்தல் கமிஷனைத் தொடர்புகொண்டு, இதுவரையிலான மாநகராட்சி மேயர் தேர்தல் வரலாற்றி, 5 லட்சத்துக்கு மேல் வாக்கு வித்தியாசத்தில் யாராவது வெற்றி பெற்றுள்ளனரா என்று தகவல் கேட்டார்.

அப்படி யாருமே வென்றதில்லை, இது வரலாற்று சாதனை என்று தகவல் வந்தது. உடனே அதை மேயர் சைதை துரைசாமியிடம் தெரிவித்துப் பாராட்டினார். இந்த மகத்தான வெற்றிக்கு மேயர் சைதை துரைசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் ஒரு முக்கிய காரணம் என்பதை ஜெயலலிதா புரிந்துகொண்டார். அதனாலே, ஐந்து ஆண்டு காலமும் மேயர் சைதை துரைசாமிக்கு ஜெயலலிதா முழுமையான ஆதரவு கொடுத்தார்.

சென்னை கவுன்சிலர்கள் முறைகேடு செய்வது அறிந்து, அவர்களை நேரில் அழைத்து கண்டித்த ஜெயலலிதா, அப்போது மேயர் சைதை துரைசாமியை அழைக்கவில்லை என்பதிலிருந்தே அவர் மீது எத்தகைய மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அறியலாம்.

மக்களுக்குத் தேவையான திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை சைதை துரைசாமிக்கு உண்டு. அதனால், முதல்வர் ஜெயலலிதாவை ஒரு சரியான சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்துப் பேசினார் சைதை துரைசாமி.  அவரது சைதாப்பேட்டை மலிவு விலை உணவகத்தின் செயல்பாடுகளைத் தெளிவாக விளக்கினார்.  தமிழகம் முழுக்க மலிவு விலை உணவகத்தை அரசுத் திட்டமாக செயல்படுத்தினால் ஏழைகளிடம் குறிப்பாக தாய்க்குலத்திடம் உங்களுக்கும் அரசுக்கும் மாபெரும் புகழும், மதிப்பும் கிடைக்கும் என்று மேயர் சைதை துரைசாமி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

பெருந்தலைவர் காமராஜர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் மக்களின் பசி தீர்த்த அன்னலட்சுமி என்று  புகழப்படுவீர்கள். வரலாற்றில் என்றென்றும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். எப்படியாவது மலிவு விலை உணவகம் திட்டத்தை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

‘’உண்மையில் இத்தனை குறைந்த செலவுதான் ஆகிறதா..? என்னால் இதை நம்ப முடியவில்லை. அப்படி என்றால் ஏன் ஹோட்டல்களில் ஒவ்வொரு பொருளுக்கும் நிறைய விலை வைத்து விற்பனை செய்கிறார்கள்? நிறைய ஹோட்டல்கள் நஷ்டம் அடைந்து  மூடப்படுவது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினார் ஜெயலலிதா.

அதற்கு சைதை துரைசாமியின் பதில்..?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment