அண்ணாநகர் டவர் கிளப் ஆக்கிரமிப்பு மீட்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 281

பெருநகர சென்னையின் மேயராக சைதை துரைசாமி பதவிக்கு வந்ததும், அதுவரை மாநகராட்சி நிலத்தை அபகரித்து வைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால், எந்த காரணத்துக்காகவும் அவரது காலத்தில் தவறுகள் நடக்க அனுமதிக்க மாட்டார். அதுமட்டுமின்றி, அவருக்கு முந்தைய காலத்தில் தவறு நடந்திருப்பது தெரியவந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடுவார்.

அதனால், ‘சைதையும் சம்பாதிக்க மாட்டார், அடுத்தவர்களையும் சம்பாதிக்க விட மாட்டார்’ என்று அவரை அறிந்த அனைவருமே புலம்புவார்கள். அப்படி அரசு நிலத்தை அபகரித்து வைத்திருந்தவர்கள் எல்லாம், தங்களுடைய குட்டு இப்போது வெளியே வந்துவிடக் கூடாது என்று அமைதி காத்தார்கள். இந்த நேரத்தில் அண்ணாநகர்  டவர் கிளப் அமைந்துள்ள இடம் தொடர்பாக மாநகராட்சிக்கு எராளமான புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

அண்ணாநகர் மூன்றாவது பிரதான சாலையில் 5,872 சதுர அடி சென்னை மாநகராட்சி கட்டிடம் டவர்ஸ் கிளப்பின் பயனுக்காக குறுகிய கால குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.  குத்தகைக்கு எடுத்தவர்  இந்தக் கட்டிடத்தையும்  மற்றும் குத்தகைக்கு விடப்படாத 33,255 சதுர அடி நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு நீண்ட காலமாக நடந்துவருவதும், அதுவரை யாரும் கண்டுகொள்ளாததும் மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.

இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த இடத்தை மீட்பதற்கு ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகள், ‘நாங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு மீட்பதற்கு அறிவுறுத்தல் செய்துவருகிறோம், அரசியலில் செல்வாக்கு உள்ள நபர் என்பதால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலவில்லை’ என்று தட்டிக் கழித்தார்கள். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம், அதுவரை நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டார்கள்.

ஆனால், இனியும் பொறுப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பொங்கி எழுந்தார் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment