மிகப்பெரும் துன்பத்திற்கு ஊசி மருந்து

டேக் இட் ஈஸி

டாக்டர் ஊசி குத்தும்போது வலிக்கிறது, ஆனால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால், இதனால் நோய் தீர்ந்துவிடும், எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம். அப்படித்தான் எல்லா துன்பங்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பது மேடுபள்ளங்கள் நிரம்பிய பாதை. இன்பம் வருகையில் மகிழ்ச்சி அனுபவிக்கிறார்கள். ஆனால், விரைவில் இன்பத்தை மறந்துவிடுகிறார்கள். புதிய கார் வாங்கிய மகிழ்ச்சி நாலைந்து நாட்களில் தீர்ந்துவிடுகிறது. சுற்றுலா மகிழ்ச்சி உடனே காணாமல் போய்விடுகிறது.

அதேநேரம், நெருங்கியவர்கள் மரணம், நஷ்டம், காதல் தோல்வி, துரோகம், நோய்க்கு மாதக்கணக்கில் அழுகிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில், டாக்டரின் ஊசி வலியை ஏற்றுக்கொண்டது போன்று துன்பத்தை ஏற்கும் மனநிலை பெற வேண்டும். 

சின்ன வயதிலிருந்து எல்லோரும் நிறைய துன்பம், வேதனை அனுபவித்திருப்போம். அவை இப்போது துன்பம் தருகிறதா என்று யோசிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு முன்பு, ஐந்து வருடங்களுக்கு முன்பு, பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த எந்த துன்பத்தின் வலியும் வேதனையும் இப்போது ஞாபகம் இருக்காது.

அதேபோன்று, இன்றைய துன்பமும் விரைவில் தீர்ந்துவிடும் என்று நம்புங்கள்.. இன்றைய துன்பத்தை எளிதாக ஏற்றுக்கொள்வதே அதனை மறப்பதற்கு எளிதான வழி. துன்பத்தை ஏற்பதற்குக் கற்றுக்கொண்டால், அங்கு கவலைப்படுவதற்கு அவசியமே இல்லை. டேக் இட் ஈசி மனப்பான்மை வந்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள். 

Leave a Comment