என்ன செய்தார் சைதை துரைசாமி – 440
2015-ஆம் ஆண்டு சென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிந்தது. அதாவது டிசம்பர் 1ம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 2ம் தேதி சென்னையில் 29 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி 1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.
அந்த நேரத்தில் கடலும் சீற்றமாக இருந்ததால் மழைநீர் கடலுக்குள் போகவில்லை. அதையடுத்து அடையாறில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்தது. அதனால், கூவம், பக்கிங்காம் கால்வாய் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. ஆனால், இதையெல்லாம் புரிந்துகொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை.
ஆனால், அந்த நேரங்களில் எல்லா மேயர் சைதை துரைசாமியும் மாநகராட்சி ஊழியர்களும் கண் இமைக்கவும் நேரமின்றி பம்பரமாக சுற்றிக்கொண்டு இருந்தனர். அந்த நேரங்களில் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்ட பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர் சைதை துரைசாமி உரை நிகழ்த்தினார்.
சென்னை பெருவெள்ளம் குறித்து மாமன்றத்தில் மேயர் சைதை துரைசாமி நிகழ்த்திய உரையைக் கேட்டு எதிர்க்கட்சியினர்கூட பிரமித்து நின்றனர். அந்த அளவுக்கு மேயர் சைதை துரைசாமியின் உரையில் உண்மையும் துல்லியமும் தெளிவும் இருந்தன.
சென்னை பெருவெள்ளத்தில் தமிழக அரசு மீது எழுப்பப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் மிகத் தெளிவான விளக்கம் இருந்தது. அன்று மேயர் சைதை துரைசாமி பேசிய உரையின் சுருக்கத்தைத் தருகிறேன். இதோ கேளுங்கள்.
’’வரலாறு காணாத மழையில் இயற்கை பேரிடரை எதிர்கொண்ட மக்களுக்கு நாம் ஆற்றிய மகத்தான பணியினை இந்த அவையில் பதிய வைப்பது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன்.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.. இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மற்றும் சேவைத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது…’’ என்று தொடங்கினார்.
- நாளை பார்க்கலாம்.
