சந்தேகம் தீர்க்கிறார் வழக்கறிஞர் நிலா
பூர்வீகச் சொத்து என்பது ஒரு இந்து சாஸ்திர சட்டத்தின்படி தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆணுக்கு, அவரின் தந்தை மூலமோ, அல்லது அவரின் பாட்டன் மூலமோ, அல்லது அவரின் முப்பாட்டன் மூலமோ, வாரிசு முறையில் சொத்து கிடைத்திருந்தால், அது அவருக்கு பூர்வீகச் சொத்து. இப்படிக் கிடைத்த சொத்து, அவருக்கு வாரிசு முறையில் கிடைத்துள்ளது.

பூர்வீகச் சொத்து என்பதற்கு அடையாளமே, ஒரு இந்துவுக்கு அவரின் தந்தை மூலம், பாட்டன் மூலம், முப்பாட்டன் மூலம், ஆக மூன்று தலைமுறை ஆண் வழியில் அந்த சொத்தானது, இவருக்கு வாரிசு உரிமையில் வந்திருந்தால் மட்டுமே அது பூர்வீகச் சொத்து.
ஒரு இந்துவுக்கு அவரின் தாய் வழிப் பாட்டன் மூலம் ஒரு சொத்தானது வாரிசு முறையில் கிடைத்திருந்தால், அது பூர்வீகச் சொத்து இல்லை. ஏனென்றால் அது தாய் வழியில் வாரிசு முறையில் கிடைக்கும் சொத்து. எனவே அது பூர்வீகம் இல்லை.
பூர்வீகச் சொத்தை அடைந்தவர் மட்டுமே அனுபவிக்க முடியாது. அவரின் மகன், அவரின் பேரன், அவரின் கொள்ளுப் பேரன், என மூன்று தலைமுறைகளில் உள்ள ஆண்கள் அவர்களின் பிறப்பு உரிமையில் அந்த பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாட முடியும் அதற்கு மேல் உள்ள தலை முறையான, அவரின் கொள்ளுப் பேரனின் மகன், அதில் பிறப்பால் உரிமை கொண்டாட முடியாது.
ஒரு சொத்து பூர்வீகமாகக் கிடைத்துள்ளது என்றால் அந்த சொத்து கிடைத்தவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என்ற மூன்று தலைமுறை மட்டுமே பிறப்பால் உரிமை கொண்டாட முடியும் அதற்கு மேல் உள்ள தலைமுறை பிறப்பால் அந்தச் சொத்தில் உரிமை கோர முடியாது.
அதேபோல, ஒருவருக்கு, அவரின் தந்தை, பாட்டன், முப்பாட்டன் ஆகிய மூன்று தலைமுறை ஆண்களின் சொத்துக்களைத் தான் இதேபோல பூர்வீகச் சொத்தாக கருதிக் கொள்ள முடியும்.
முப்பாட்டனின் தந்தையின் சொத்து ஒருவருக்கு பூர்வீகச் சொத்தாக பிறப்பால் உரிமை கோர முடியாது. ஆக, ஒருவருக்கு, தகப்பன் வழியில் மேலே மூன்று தலைமுறையும், மகன் வழியில் கீழே மூன்று தலைமுறையும் ஆக இவருடன் சேர்த்தால், ஏழு தலைமுறைகள் மட்டுமே பூர்வீக சொத்துரிமையை பிறப்பால் பெற முடியும்.
பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாமல் இருந்து வந்தது. 1937-ல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன்படி, இறந்த ஆணின் விதவை மனைவி, அவளின் கணவரின் பங்கை அடைந்து அவளின் ஆயுட்காலம் வரை ஆண்டு அனுபவிக்கும் உரிமை மட்டும் வழங்கப்பட்டது. அந்த விதவை மனைவி அப்படிப் கிடைத்த பூர்வீகச் சொத்தின் தன் பங்கை விற்பனை செய்ய முடியாது. அவள் வாழ்நாள் வரை அனுபவிக்க மட்டும் முடியும் என்ற நிலை இருந்தது. அவள் வாழ் நாளுக்கு பின்னர் அவள் கணவரின் மற்ற பங்காளிகளுக்கு (கோபாசனர்களுக்கு) அந்த பங்கு போய்ச் சேரும்.
1956-ல் இந்து சாஸ்திரச் சட்டத்தை அடியோடு மாற்றி விட்டு புதிதாக இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது அதில் பூர்வீகச் சொத்தில், இறந்த கணவரின் பங்கு அவரின் மனைவி மகள் உட்பட அவரின் வாரிசுகளுக்கு போய் சேரும் என்று மாற்றப்பட்டது. இதன்படியும், மகளுக்கு ஒரு சிறு பங்கே கிடைத்தது. மகளுக்கும் மகனைப் போலவே பூர்வீகச் சொத்தில் சம உரிமை கொடுக்க வேண்டும் எனக் கருதி, 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது அதன்படி, மகளுக்கும் மகனைப் போலவே சரி சம பங்கு கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
