என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 68
ஏழை, எளிய மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம் நடத்துவதில் லாபநஷ்டம் பார்க்கத் தேவையில்லை என்பதே அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் எண்ணமாக இருந்தது. ஆனால், அம்மா உணவகத்தையும் லாபத்தில் இயங்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது.
ஏனென்றால், அரசாங்க இடத்தில் இயங்குவதால் அம்மா உணவகத்தின் இடத்துக்கு வாடகை கிடையாது. மானிய விலையில் அரிசி வாங்கப்படுகிறது. மேற்பார்வை ஊழியர்கள் அனைவரும் மாநகராட்சியில் சம்பளம் வாங்குகிறார்கள். உணவு தயார் செய்வதற்கான மூலப் பொருட்கள் மற்றும் பணியாளர் சம்பளம் தவிர அம்மா உணவகத்திற்கு வேறு செலவினங்கள் இல்லை.
எனவே அம்மா உணவகத்தை லாபகரமாக நடத்துவதற்கான செயல்திட்டங்களை மேயர் சைதை துரைசாமி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்தார்.
- அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை விற்பனைக்கு வைப்பதற்குத் திட்டமிட்டார். இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் அம்மா உணவகத்திற்கும் ஒரே நேரத்தில் பயன் கிடைக்கும்.
- நமது பாரம்பரிய தின்பண்டங்களான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், சத்து உருண்டை போன்றவற்றை காட்சிப்படுத்தி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார். இதனால் மாணவர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.
- அம்மா உணவகம் அமைந்திருக்கும் பகுதி விவசாயிகளிடம் இருந்து, அவர்கள் விளைவிக்கும் காய்கறி, இளநீர், நுங்கு போன்றவற்றை கொள்முதல் செய்து குறைந்த லாபத்தில் அம்மா உணவகம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இது சிறு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை தருவதாகவும் லாபம் ஈட்டுவதாகவும் அமையும் என்று சைதை துரைசாமி கணக்குப் போட்டார்.
- நாளை பார்க்கலாம்